பெண்களுக்கான இணைய தளம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் ‘கூகுள் இந்தியா’ இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணைய தளத்தை அமைத்துள்ளது. hwgo.com (ஹெல்பிங் உமன் கெட் ஆன் லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் அதை பயன்படுத்த தேவையான அடிப்படை விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.
கம்ப்யூட்டர் அடிப்படையில் தொடங்கி, இணைய அடிப்படை, இ-மெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன் படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது.