வாயுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம்
வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது.
அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர்பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாய்வுக் கோளாறு ஏற்படுகின்றது.
இதனை போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* ஓமத்தை இளம் வறுப்பாக வறுத்து பொடியாக்கி பனை வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து இரைச்சல் நிற்கும்.
* தேங்காயை துருவி பால் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் சரியாவதுடன் வயிற்றுவலியும் சரியாகும்.
* கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து அதில் அரை டீஸ்பூன் அளவு சாற்றைக் குடித்து வந்தால் வயிறு உப்புசம் விரைவில் சரியாகிவிடும்.
* மணத்தக்காளி இலைகளை நன்றாக அரிந்து மண்சட்டியில் போட்டு தாரளாமாக தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்ட அதை காலை மாலை என குடித்து வந்தால் கைகால்களில் வாய்வுத்கோளாறுகளால் ஏற்பட்ட வலிகள் நீங்கும்.
* இளம் பிரண்டையை நார் உரித்து தேவையான அளவு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, தேங்காய், உளுந்து போன்றவற்றைச் சேர்ந்து நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து மையாக அரைத்து மூன்றுவேளையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு வாய்வுக் கோளாறு விலகும்.
* காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை விலகும்.
* இஞ்சியை இடித்துச் சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி பாகு பதமானதும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய்வுத்தொல்லை விலகும்.
* சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பெருங்காயம் மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்.
* சுக்கைப் பொடியாக்கி இரண்டு சிட்டிக்கை எடுத்துக் தேன் சேர்த்துக் குழைத்து காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகிவிடும்.
* ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊற வைத்து குடியுங்கள், வயிற்று இரைச்சல் தெரியாமல் போய்விடும்.