இருதயத்தினை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்
இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.
இந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.
உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே
* உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.
* ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.
* உப்பின் அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
* மது வேண்டாமே
* புகை பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.
* தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
* மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
* இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.
* மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.
* வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.
நீண்ட நேரம் வேலை செய்யாமல் நேரத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.
இருதயத்தினை பாதுகாப்பதற்கான டிப்ஸ்:
* அவ்வப்போது இருதயத்திற்கும் சற்று வேக தூண்டுதல் நல்லதே. நல்ல புத்தகம், பாசமானவர்களுடன் இருத்தல், இவை இருதயத்தினை சற்று சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.
* வெய்யில் காலத்தில் அதிக தூசு இருக்கும் நேரங்களில் வெட்ட வெளியில் உடற் பயிற்சி செய்யக் கூடாது. இது உங்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவினைக் குறைத்து இருதய பிரச்சினைகளை கூட்டி விடும்.
* புகை பிடிக்கவும் வேண்டாம். புகை பிடிப்போர் அருகில் இருக்கவும் வேண்டாம்.
* நீச்சல் போன்ற பயிற்சியினை ஆரம்ப காலத்தில் இருந்தே பழகி விடுவது நல்லது. இது 60 சதவிகிதம் இருதய பாதிப்பு ஏற்படுவதினைக் குறைத்து விடுகின்றதாம்.
* மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.
* அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.
* punching bag ஒரு தலையணையாவது வைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஏற்பட்டால் அதனை வலுவாக boxing போல் குத்துங்கள். ஏனெனில் கோபம் உங்களுள் இருந்தால் உங்களை பாதிக்கும். வெளி வந்தால் மற்றவரை பாதிக்கும்.
* உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு ஆஸ்பிரீன் மாத்திரை அவசியமா என கேட்டறியுங்கள். உங்கள் வயது, உடல் நலம், வேலை பளு இவற்றுக்கேற்ப அவரே உங்களுக்கு சரியான அளவினை தேவையெனின் பரிந்துரை செய்வார்.
* காலை உணவினை தவறாது உண்பவர்களுக்கு 44 சதவிகிதம் இருதய பாதிப்பின் அபாயம் குறைந்தே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமா? 41 சதவிகித சர்க்கரை நோய் பாதிப்பும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.
* 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.
* முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.
* டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது. இதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.
* காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
* அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.
* அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
* குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.
* ஓமேகா-3, இதனைப் பற்றி உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.