தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தனியார் பள்ளிக்கூடங்களை நாடுவது ஏன்?

‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்றார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்குத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் வழங்கும் கல்வித்தரத்தை பொறுத்துத்தான் மாணவர்கள் ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாறுவார்களா? அல்லது எரிநட்சத்திரங்களாக வீழ்ந்துவிடுவார்களா? என்பது அமையும்.

அந்தவகையில், பிளஸ்-2 தேர்வுதான் அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக அமையும். நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்புக்கு பிளஸ்-2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

 

 

 

 

மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள், 11 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 3,328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதுதவிர, 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 720 மதிப்பெண்கள் கொண்ட ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் மிகவும் கவலையளிக்கத்தக்க ஒருநிலை என்னவென்றால், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களில் யாரும் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களின் நிலைமை மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் இல்லை.

1 முதல் 1000 வரையிலான தரவரிசை பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் 4 பேர்தான் இடம் பெற்றுள்ளனர். 1001 முதல் 3000 வரையிலான தரவரிசை பட்டியலில் 8 பேரும், 3001 முதல் 5000 வரையிலான தரவரிசை பட்டியலில் 20 பேரும் மட்டுமே உள்ளனர். ஆக, ஏறத்தாழ 20 மாணவர்களுக்குத்தான் அரசு கோட்டாவில் மருத்துவப்படிப்புக்கு இடம்கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.

இந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கும் உயரும். பொது பட்டியலில் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க் 384 என்ற நிலையிலிருந்து, இப்போது 415 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு பட்டியலிலும் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கைவிட, 50 மதிப்பெண்கள் உயரும் நிலை உள்ளது. மொத்தத்தில், 200 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற யாருக்கும் மருத்துவப்படிப்பில் இடம்கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்த பட்டியலை பார்க்கும்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் நடத்திய ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தேர்வுபெறும் மாணவர்களெல்லாம் பெரும்பாலும் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களை மாணவர்கள் நாடுவதற்கு இதுதான் காரணம்.

 

 

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களை இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து, தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையான பயிற்சியை வழங்கவேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker