ஆரோக்கியத்தை கெடுக்கும் இரைச்சல்
தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.
நமது இருதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் என்ற மெல்லிய நரம்புகள் அதிக சத்தம் மூலம் தளர்வடைந்து விரிகின்றன. இந்த தளர்ச்சி இருதயத்தின் வேலைகளை கடினமாக்கி, நாளடைவில் அதன் செயல்திறனை பாதிக்கிறது. இருதயம் பழுதடைவதால், அதைச் சார்ந்துள்ள நுரையீரல், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்துக்கும் மறைமுகமாக கேடு ஏற்படுவதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
லொபார்டி என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.
நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பை இப்போது மாறியிருக்கிறது. கடந்த 3 வருடங்களாக அங்கு கடைபிடிக்கப்படும் ஒலி மாசு கட்டுப்பாடுகள் தினசரி ஒலி அளவை மட்டுமின்றி, இரைச்சல் மிகுந்த விநாயகர் சதுர்த்தி விழா, தாண்டியா என்ற கோலாட்ட விழா ஆகியவற்றின் சத்த அளவுகளையும் குறைத்திருக்கிறது. 5 வருட சிறைவாசம் அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்ற அளவுக்கு ஒலி மாசுக்கு எதிரான சட்டங்கள் அங்கு உள்ளன. இதே நடைமுறைகள் தமிழகத்துக்கு என்றைக்கு வருமோ?