இரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் – தீர்வுகள்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம். ரத்தச்சோகை உடலிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவைக்கொண்டுதான் கண்டறியப்படுகிறது.
சராசரி அளவுகள்…
ஆண்களில் 13.5 to 17.5 கி/டெ.லி (g/dl)
பெண்களில் 12 to 16 கி/டெ.லி (g/dl)
ஆண்களுக்கு 13.5 கி/டெ.லி-க்குக் கீழேயும், பெண்களுக்கு 12 கி/டெ.லி-க்குக் கீழேயும் இருந்தால் அதை ரத்தச்சோகை என்று சொல்லலாம்.
ரத்தச்சோகை அறிகுறிகள்…
* மூச்சுவாங்குதல்
* இதயத்துடிப்பு அதிகரித்தல்
* நெஞ்சு படபடப்பு
* அடிக்கடி மயக்கம் ஏற்படுவது
* அடிக்கடி தலைவலி
* சருமம் மற்றும் வாயின் உட்பகுதி வெளுத்துப்போதல்
ரத்தச்சோகைக்கான காரணங்கள்
* இரும்புச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது
* வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் குறைபாடு
* அடிபடுதல் போன்றவற்றால் ரத்தம் அதிகமாக வீணாவது
* மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு
* கர்ப்பம் காலத்திலும் பதின்பருவத்திலும் பெண்களுக்கு ரத்தத்தின் தேவை அதிகரிப்பது
* குழந்தை பிறக்கும்போது ரத்தம் அதிகமாக வீணாவது
* வயிற்றில் புழுக்கள் இருப்பது.
ரத்தச்சோகை போக்க என்ன செய்யலாம்?
ரத்தச்சோகை மிகவும் குறைவாக (ஹீமோகுளோபின் 10 கி/டெ.லி-க்கு மேல்) இருக்கும்போது வீட்டிலேயே சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மாத்திரைகள் மூலமாகவோ அல்லது ஊசியின் மூலமாகவே இரும்புச்சத்து உடலுக்குள் செலுத்தப்படும். ரத்தச்சோகை மிகவும் தீவிரமாகவும், ஹீமோகுளோபின் மிகவும் குறைவாகவும் இருப்பவர்களுக்கு ரத்தத்தை ஏற்றவேண்டியிருக்கும்.
இரும்புச்சத்து அதிகமிருக்கும் உணவுகள்
இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். அப்போது இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக மாற்றுவதற்கு உடல் முயலும். இது சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.