உலக நடப்புகள்புதியவை

பெண்களே கூடுதல் வருவாய் வரும்போது..

போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்…

போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் அப்படி இருக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால், நமது பொருளாதார அஸ்திவாரம் பலம் பெறும். கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்…

 

 

 

 

அவசரகால நிதி:

எந்த ஒரு நிதித் திட்டமிடலிலும் அடிப்படையான விஷயம், ஓர் அவசரகால நிதியை உருவாக்குவது. ஆனால் நம்மில் பலர் இதுகுறித்து அலட்டிக்கொள்வதில்லை. அதாவது, அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்து அப்படி ஒரு தொகையைப் பாதுகாப்பதில்லை அல்லது அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் நாம் திடீர் செலவுகள் ஏற்படும்போது தடுமாறிப் போய்கிறோம்.

அந்த மாதிரி சமயங்களில் நாம், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுச் சமாளிக்க முயல்கிறோம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்த விழைகிறோம். ஆனால், கூடுதல் வருவாயைப் பயன்படுத்தி ஓர் அவசரகால நிதியை உருவாக்கிக்கொண்டோம் என்றால், அவசரச் செலவுகள், எதிர்பாராத செலவுகளைச் சமாளித்துவிடலாம். கிடைத்த கூடுதல் தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டுவைப்பதைவிட, ‘லிக்விட் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். அவை, சேமிப்புக் கணக்கை விட அதிக ‘ரிட்டர்ன்’ அளிக்கும். தேவைப்படும்போது அவற்றில் 24 மணி நேரத்துக்குள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

கடன்களை திரும்பச் செலுத்துங்கள்:

கூடுதல் தொகை கைக்கு வரும்போது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை முடிப்பதற்குப் பார்க்க வேண்டும். காரணம், அவற்றுக்கான வட்டி அதிகம். இதுபோன்ற கடன்களை வைத்துக்கொண்டு முதலீடு செய்வதில் அர்த்தமில்லை.

முதலீட்டில் இருந்து பெறும் வருவாயை விட, மேற்கண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை உணருங்கள். நீங்கள் வீட்டுக்கடன் செலுத்திக் கொண்டிருந்தால், கூடுதல் தொகை கிட்டும்போது அதில் ஒரு கணிசமான தொகையை முன்கூட்டிச் செலுத்தலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் இப்படி முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிப்பதில்லை. இவ்வாறு முன்கூட்டி கணிசமான தொகை செலுத்துவதால், நாம் கட்டும் வட்டி விகிதம் குறையும்.

காப்பீட்டு அளவை அதிகரிக்கலாம்:

நாம் நமக்கு போதுமான அளவு காப்பீடு பெற்றிருக்கிறோமா என்று அவ்வப்போது ஆராய்வதும், அந்த அளவைக் கூட்டிக்கொள்வதும் முக்கியம். போனஸ் போன்ற கூடுதல் தொகைகள் வரும்போது, நமது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு அளவுகளை அதிகரித்துக்கொள்ளலாம். மருத்துவச் செலவுகள் கூடிக்கொண்டே செல்லும் தற்போதைய சூழலில், கூடுதல் பணம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நமது மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

திறன்களை வளர்க்கலாம்:

இன்று எல்லோருமே கூடுதல் வருவாயை விரும்புகின்றனர். ஏதாவது பகுதிநேர வேலை பார்த்துக்கூட குடும்பத்தின் வருவாயைக் கூட்ட எண்ணுகின்றனர். இது நல்ல விஷயம்தான். ஆனால், கூடுதல் வருவாய் வேண்டும் என்றால், கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, கணினி அறிவு. கணினி சார்ந்த, கூடுதல் வேலைவாய்ப்புக்கு உதவும் ஏதாவது கோர்ஸ் போன்றவற்றைப் பயில நமக்குக் கிடைத்த உபரித் தொகையை உபயோகிக்கலாம்.

 

 

 

 

 

அடிப்படைத் தொகைக்கு உபயோகிக்கலாம்:

நாம் வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றைப் பெற எண்ணியிருந்தால், அதற்கு, டவுன் பேமண்ட் எனப்படும் அடிப் படைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நமக்கு கூடுதல் வருவாய் வரும்போது, வழக்க மான அடிப்படைத் தொகையைவிட கூடுதலாகச் செலுத்தப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நமக்கு, ஈ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர தவணைத் தொகையின் அளவு குறையும்.

முதலீடு செய்யலாம்:

நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுகாலத்தை மனதில் வைத்து முதலீடு மேற்கொண்டு வரக்கூடும். கையில் கணிசமாகப் பணம் கிடைக்கும்போது, அதை உங்கள் முதலீட்டை வலுப்படுத்த உபயோகிக்கலாம். நீங்கள் உங்களின் நீண்டகால இலக்குகளை எட்டுவதை நோக்கி ‘ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்’களில் ஒரு கணிசமான தொகையை இடும் அதேவேளையில், ‘லிக்விட் பண்ட்’களிலும் முதலீடு செய்யலாம்.

நாம் எப்போதும் நமது செலவு விருப்பங்களுக்கும், நமது பொருளாதார பலத்தை வலுவாக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பது முக்கியம்.

இன்று நம்மை மகிழ்விக்கும் செலவுகளைவிட, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளே நன்மை பயக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker