சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளில் பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து போலீசில் பிடிபட்ட சம்பவம் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் கல்வியாளர்களிடமும் கதிகலங்க வைத்திருக்கிறது. பேனா பிடித்த கையில் பட்டா கத்தியை பிடிக்கலாமா? என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கல்லூரியில் படிக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்தமாட்டார்கள். பள்ளியில் இருபாலர் படித்தாலும் அங்கு கட்டுப்பாடு உண்டு. ஆனால் கல்லூரியில் இருபாலரும் நண்பர்களாக பழகுவதற்கு தடை எதுவும் இல்லை.
‘டீன்ஏஜ்’ பருவத்தில் கல்லூரிக்கு பயணிக்கும் மாணவ-மாணவிகள் சில நேரங்களில் காதல் வலையில் வீழ்ந்துபோகிறார்கள். வேறு சிலர் தகாத நட்பு வட்டாரங்களால் போதை பழக்கத்தில் மூழ்கிவிடுவதும் உண்டு. எனினும் மாணவர்களை செம்மைப்படுத்துவது கல்லூரி பருவம் தான்.
சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மாணவர்களின் மனதில் வன்முறை புகுந்து இருப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் சரியான முறையில் நீதிபோதனைகள், விளையாட்டுகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பிப்பதோடு, பழங்கால நீதிகதைகளை எடுத்துரைப்பார்கள்.
விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் நேரத்தில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடி நட்பு பாராட்டினார்கள். ஆனால் இன்று அந்த விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் நேரம், மற்ற பாடங்களின் ஆசிரியர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி, முன்பு வீடுகளுக்கு சென்றாலும் பெற்றோர்களின் அரவணைப்பு, தெருக்குழந்தைகளுடன் விளையாடி மகிழும் அனுபவம் கிடைக்கும். இன்றோ, பள்ளி முடிந்த பிறகும் எந்திரத்தனமாக பள்ளி குழந்தைகள் டியூசன், வீட்டு பாடங்களில் முடக்கப்படுகின்றனர்.
வீடுகளில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் வீடியோ கேம், தொலைக்காட்சிகளில் வரும் சண்டை காட்சிகளை அப்படியே மனதுக்குள் நிறுத்தி கொள்ளுவதும், வன்முறையில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக இருப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியை 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் சரியாக படிக்காததை பெற்றோரிடம் கூறி கண்டித்ததால் கொலை செய்ததாக மாணவன் கூறினான்.
2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வரை அந்த கல்லூரி மாணவர்களே திட்டமிட்டு கொலை செய்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனை பள்ளியின் வகுப்பறையில் வைத்தே கொடூரமாக பிற மாணவர்கள் குத்தி கொலை செய்தனர். இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.
கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் நான் தான் பெரியவன். நான் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிற மாணவர்களை அணுகும்போது மோதல் போக்கு ஏற்படுகிறது. இத்தகைய போக்குடன் இருக்கும் மாணவர்கள் தங்களின் பாதையை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தாங்கள் கல்வி கற்க பெற்றோர் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக உணர்ந்தால் தான் பேனா பிடிக்க வேண்டிய வயதில் பட்டா கத்தியை பிடிக்க மாட்டார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீதிபோதனை, விளையாடும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். கல்லூரி செல்லும் மாணவர்களும் தங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்ற படிப்பில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் கருதி அன்பு கட்டளையுடன் கல்வியையும், வாழ்வியலையும் போதித்தால் நிச்சயம் இன்றைய மாணவர்கள் தங்களை திருத்தி கொள்வார்கள்.