பெண்களால் வீட்டில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா?
“வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?…
“வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?…
ஆண்கள் எப்போதும் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் குடும்பத்தினரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் குடும்பத்தில் இருந்துதான் நிராகரிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். தனிமை உணர்வு அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. இப்படிப்பட்ட மனநிலை எல்லா ஆண்களுக்கும் உண்டு.
‘இந்தக் குடும்பத்தின் முக்கிய நிர்வாகி நான்தான். என்னால் தான் குடும்பத்தின் வரவு, செலவு அனைத்தும் நடக்கிறது. இந்த குடும்பத்திற்கே நான் தான் பாதுகாப்பு. நான் தான் தலைவன். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எதிர்பார்ப்பு எல்லை மீறிப் போய்விடக் கூடாது. மற்றவர்கள் வருந்தும்படி அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயங்களை கையாள வேண்டியிருக்கும். அவரவர் வேலையில் தீவிர கவனம் செலுத்தும்போது மற்றவர்கள் நலனில் கவனம் செலுத்த முடியாத சூழல் நேரலாம். குடும்பத் தலைவனும் இதற்கு விதி விலக்கல்ல. அதை சரிவர புரிந்து கொள்ளாமல் மனதை குழப்பிக்கொள்ளக் கூடாது.
‘வர வர என்னை யாரும் இந்த வீட்டில் மதிப்பதே இல்லை. கொஞ்சம் கூட என் மேலே யாருக்கும் அக்கறை கிடையாது. என்னை கவனித்துக் கொள்வதை விட என்ன பெரிய வேலை? நான் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்காக மாடாய் உழைக்கிறேன். எனக்காக சின்ன வேலை செய்வது கூட உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் மட்டும் இல்லேன்னா… உங்க நிலைமை என்னவாகும் என்பதை யோசிச்சு பாருங்க’ என்பது போன்ற புலம்பல்கள் பெரும்பாலான குடும்பத் தலைவர்களிடமிருந்து வருவது சகஜம். இது பெண்களை எந்த அளவிற்கு பலவீனப்படுத்துகிறது என்பது அவர்களுக்கே புரிவதில்லை.
பெரும்பாலான ஆண்கள் வெளி இடங்களில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலையில் இருப்பார்கள். அதுபோல் வீட்டில் உள்ளவர்கள் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகை மனநிலை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் சவுகரியம், அசவுகரியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
“ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது பெண்களும் வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். அவா்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டில் ஆள் தேவை. ஆனால் அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டு மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
அது பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காவிட்டால் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பெண்களை குறை சொல்ல தொடங்கி விடுவார்கள். இந்த நிலை மாறினால்தான் பெண்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும். ஆண்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
தங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருப்பது போலவே, மனைவிக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் ஆண்கள் மனதில் பதிவதில்லை. நிறைய பேர் திருமணமான புதிதில் வேலை வாங்கியது போலவே எப்போதும் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சிறு தவறு நடந்தாலும், ‘தன்மேல் அக்கறை இல்லை’ என்று மனைவியை குறை சொல்வார்கள். ஆண்களின் இந்த மனநிலை பெண்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, மன அழுத்தத்தில் தள்ளி விடுகிறது. கணவன் வருத்தப்படும்படி தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல உணர்கிறார்கள். அவர்களுடைய இயல்பையும், இயலாமையையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.
ஆண்கள் அனுசரணையாக நடந்து கொள்ளும் பட்சத்தில்தான் பெண்களின் உடல்நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும். கவனிப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, உபசரிப்பு என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் மனைவியால் ஏதோ ஒரு காரணத்தால் முடியாமல் போகும்போது அதனை பெரிதுபடுத்தக்கூடாது. தான் ஏதோ ஒதுக்கப்பட்டதைப் போல மனச்சோர்வு அடையக்கூடாது. மற்றவர் தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் குடும்ப நலனுக்காக பெண்கள் செய்யும் தியாகங்கள் புரியும். அதேவேளையில் ஆண்களால் தங்கள் துணை, தன்னை ஒதுக்குவதற்கான குறைந்தபட்சமாக சில காரணத்தைக் கூட சொல்ல முடியாது.
குடும்பத்தில் அனைவரும் முக்கியம். அதில் ஒருவரை மட்டும் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது மற்ற வேலைகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அதனை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக சில பழக்க வழக்கங்களை பெண்கள் மாற்றிக் கொள்வதுபோல, ஆண்களும் சில விஷயங்களில் மாறித்தான் ஆக வேண்டும்.
வெளியில் பல பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது வீட்டில் நிம்மதியும், அக்கறையும் தேவை என்பது நியாயமானது தான். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமையையும் உத்தேசித்து நடந்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான உபசாரங்கள் கிடைக்கவில்லையே என்று கோபிக்கும் ஆண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு மிகவும் அவசியமானது.