மூக்கு அழகும் முக்கியம்
உடல் அழகில் அக்கறையை காட்டும் பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.
உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.
மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.
மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.
ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம்.