நீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது?
நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.
பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையே ஒரு நல்ல முதலீட்டு உத்தியாக கருதுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வை நடத்தியது.
தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளாமல்விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது. அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறியது.
எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலும் செய்யாமல் இருப்பது மிகவும் லாபகரமான உத்தி ஆகும். இது மிகவும் எளிதான, சிறந்த உபாயம்தான்.
ஆனால் முதலீட்டில் நீண்டகாலம் என்பதற்கு பலரும் பலவித வரையறையைக் கூறுகிறார்கள்.
உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்துக்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டுக் காலம் ஒரு வருடத்துக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும்.
இது இந்திய வரி விதிப்பு சட்டப்படி இருக்கலாம். ஆனால் அதிக வருமானம் தரும் முதலீடு என வரும்பொழுது இந்தக் கால வரம்பு அதற்குப் பொருந்தாது. அப்போது ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.
பங்குகளில் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் முதலீடு செய்யப்பட வேண்டும்? இதற்கான பதில், பங்குச்சந்தையில் நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்சின் ஐந்து வருட வருவாய் வருடத்துக்கு தோராயமாக 12.77 சதவீதம் அல்லது ஒட்டுமொத்தமாக 79 சதவீதம் ஆக உள்ளது.
எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் 8.9 முதல் 41.8 சதவீதம் வரை உள்ளது. இது நீண்ட கால முதலீட்டுக்கு ஆதரவாக உள்ள ஒரு வலுவான வாதம் ஆகும்.
வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்டகால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படும்.
பங்குச் சந்தையானது சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கிறது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஓர் உச்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல், அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.
பங்கு முதலீட்டில், ‘நீண்ட காலம்’ என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காலத்தை வரையறுப்பார்கள். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை நீண்டகாலம் எனக் கூறலாம்.