தோள்களுக்கு வலிமை தரும் ஏக பாத பிரசரணாசனம்
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பெயர் விளக்கம் : ‘ஏக’ என்றால் ஒன்று என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இந்த ஆசன நிலையில் ஒரு கால் பாதத்தை நீட்டி வைத்து செய்வதால் ஏக பாத ப்ரசரணாசனம் என்று பெயர் பெற்றுள்ளது.
செய்முறை : மூன்றாம் நிலையிலிருந்தபடியே கைகளை வளைக்காமல், வலது காலை பின் நோக்கி நீட்டி கால்விரல்களை தரையில் ஊன்றி வைக்கவும். அதே சமயம் தலையை மேலே உயர்த்தவும்.
மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மடக்கிய இடது காலின் முழங்கால் நேராகவும், கைகளுக்கு முன் வரும்படியும் வைத்துக் கொள்ளவும். பார்வை மேல் நோக்கி இருக்கட்டும். மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி வைப்பதின் மீதும், மார்பு, கழுத்தை மேல் நோக்கி உயர்த்துவதின் மீதும், ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : இப்பயிற்சியில் முன்னால் வைத்திருக்கும் காலின் பாதமும், உள்ளங்கைகளும் முழுமையாக தரையில் படிந்திருக்க வேண்டும். மார்பை நன்றாக உயர்த்தி தலையை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்.
பயன்கள் : தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும்.