முதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்
சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.
இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு உடலின் உள்உறுப்புகள் செய்யும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-
தண்டுவட நரம்பு மண்டலம்
நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
செயல்பாடுகளில் பாதிப்பு
பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.
அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.
பிசியோதெரபி
அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.
பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.
சக்கர நாற்காலி
தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.
பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.