பெண்களின் திடீர்ப் பணத்தேவைக்கு உதவும் நீண்டகால முதலீடுகள்
நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
நீண்ட கால முதலீடுகளை நமது திடீர்ப் பணத்தேவைக்குப் பயன்படுத்த முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.
நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். அதுகுறித்துப் பார்க்கலாம்…
பொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.
பொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.
நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.
எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.