கூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா?
முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் ஹேர் டையை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன.
இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.
நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.
விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன்,
தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’