பள்ளிக் கல்விக்கு புதிய பாதை வகுப்போம்
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை புத்தகங்களையும், உபகரணங்களையும் பெற்றுத் தருவதோடு, அவர்களை ஒரு நல்லொழுக்கமிக்க மனிதனாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
‘கல்வி என்பது வெற்றுத் தகவல்களை மூளைக்குள் செலுத்தி, அது புரியாமலும், செரிமானம் ஆகாமலும், மூளையை முடங்கவைப்பது அல்ல. மனிதனை மனிதனாக உருவாக்குவதும், வாழ்வினை உயர்த்துவதும், பண்புகளை மேம்படுத்துவதும்தான் உண்மையான கல்வி’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
பள்ளிக்கல்வியின் நோக்கமே, ஆழ்ந்த அறிவை வளர்ப்பதும், அளப்பரிய சிந்தனையைத் தூண்டுவதும்தான். அறிவை வளர்ப்பதற்கு செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதை மனதிற்குள் நிலைநிறுத்துகின்ற மனப்பாட சக்தி அவசியம். அதைப்போல் சிந்தனையை வளர்ப்பதற்கு, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும் முக்கியம். இத்தகைய அறிவுக்கும், சிந்தனைக்கும் வடிவம் கொடுக்குமிடம்தான் பள்ளிக்கூடம்.
வகுப்பறைக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். மாணவர்கள் கற்றுக்கொள்ள வருகிறார்கள். கற்றுக்கொடுப்பவரை விட, கற்றுக்கொள்கின்ற மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தால், அந்த வகுப்பறை மாணவர்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள ஆசிரியர்களிடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு வழிமுறையைத் தாண்டி கற்றுக்கொடுக்க பல வழிமுறைகள் இருக்கும்.
ஒரு முறை ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு விமானம் எவ்வாறு பறக்கின்றது என்பதைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். நாற்பத்தைந்து நிமிட வகுப்பின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் புரிந்ததா? என்று கேட்க, மாணவர்கள் அனைவரும் அமைதியாய் அமர்ந்து இருந்தனர்.
அன்று மாலை, வகுப்பறை முடிந்ததும், அனைத்து மாணவர்களையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே பறவைகள், கடற்கரையில் பறந்து வந்து இறங்குவதையும், மீன்களைக் கொத்தித் தின்ற பின்னர், வேகமாய் நடந்து அதன் இறகுகளை விசையுடன் அழுத்துவதால் மேல்நோக்கி பறப்பதையும், அதன் வால்பகுதியை அசைப்பதால் அது விரும்பும் திசைக்கு செல்வதையும், கூர்ந்து கவனிக்கச் செய்தார்.
அதனைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு சிறுவன் எப்படியும், இப்பறவையைப்போல் உயரப் பறக்க வேண்டும் என்றும், தான் விரும்பும் திசையிலே வானத்தில் உயரப் பறக்கும் விமானியாக வேண்டும் என்றும் தீர்மானித்தான். கற்றுத்தந்ததை மாணவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை மாற்றி, கற்றுத்தரும் முறையினை சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியர் மாற்றியபோது ‘அப்துல் கலாம்’ என்ற ஒரு மாணவர் இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞானியாக எழுச்சி கொண்டார். அவர் நம் நாட்டின் முதல் குடிமகனானார்.
வகுப்பறையை தாண்டி, ஆசிரியர்கள் மாணவர்களை புதிய வழிமுறையில் பாடங்களை கற்றுத்தரும்போது, நாளை சாதனை மாணவர்கள் எழுதும் புத்தகத்தில் அவ்வாசிரியர் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
ஒவ்வொரு ஆசிரியரும் கலங்கரை விளக்கங்கள். அவர்களின் உன்னத வழியினை சிக்கெனப் பிடித்துக்கொண்டால், ஒவ்வொரு மாணவரும் தேசத்தின் லட்சிய மாணவர்களாக உருவெடுப்பர்.
கல்வி என்பது அறியாமையை அகலச்செய்யும் அணையா விளக்கு. அவ்விளக்கினை, ஒரு மாணவரின் நெஞ்சில் ஏற்ற, தளராத உள்ளத்தை தருகின்ற எண்ணெயாய் இருப்பவர்கள் பெற்றோர். திரியாகிய மாணவர்களுக்கு தங்களின் ஞான ஒளியினை பரிசாய்த் தருபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் உயரிய லட்சியத்திற்கு தூண்டுதலாக இருப்பது பல சாதனைகளை அனுதினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இச்சமூகம். இந்த அம்சங்களும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம்.
இன்றைய சூழலில், நாகரிகத்தின் வளர்ச்சியாலும், விஞ்ஞானத்தின் வியப்பான விபரீதங்களாலும், ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான எண்ணங்களோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். எனவே, ஒரே நடைமுறையில் கற்றுத்தரும் வழிமுறைகள் அனைவருக்கும் பொருந்தாது. காரணம், மாணவர்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் வேறுபட்டது.
எனவே ஒரு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஒரே மாதிரியான திட்டங்களை வகுப்பதைவிட, ஒத்த மாணவர்களுக்கான பல திட்டங்களை வகுப்பது தான் ஒரு வகுப்பறையின் வெற்றியை நிர்ணயிக்கும். இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வகுப்பறைதான் ஒரு லட்சிய வகுப்பறையாக திகழ்கிறது.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை புத்தகங்களையும், உபகரணங்களையும் பெற்றுத் தருவதோடு, அனுதினமும் அவர்களது பழக்க வழக்கங்களை உன்னிப்பாக கவனித்து, அவர்களை ஒரு நல்லொழுக்கமிக்க மனிதனாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம். எனவே நம் குழந்தைகள் எவ்வித கஷ்டமும் பட்டுவிடக்கூடாது என்று அனைத்து பெற்றோரும் நினைப்பதுண்டு. அதற்காக குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கித் தரலாம், ஆனால் அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், மாணவர்களின் லட்சியம் சிதறுண்டு போகும்.
இச்சமூகம் நல்லவர்களையும், தீயவர்களையும் உள்ளடக்கியது. முன்மாதிரியாக இருக்கும் நல்லவர்கள், அடிக்கடி மாணவர்களோடு கலந்துரையாடி ஊக்கப்படுத்த வேண்டும். தவறுகளால் தீண்டப்பட்டவர்கள், வருகின்ற தலைமுறை மாணவர்களுக்கு, அத்தீதினைத் திணிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும், ஒரு பயிரினை வளர்க்க உரமிடுதலும், களை எடுத்தலும் போல் அவசியமானதாகும்.
அதிகாலை எழுந்து, அன்றைய நாளினை நம்பிக்கையோடு தொழுது, தனது கடமைகளை மகிழ்வாய் எவரின் துணையின்றி தானாகவே முடிக்க வேண்டும். நேற்றைவிட இன்றைய நாளில் நல்லறிவாலும், நற்சிந்தனையாலும், இனிதாய் வளர்ந்து, மேன்மை ஒழுக்கத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து, வாய்ப்பினை தினமும் உருவாக்கி, இயற்கைக்கும், இயலாதவருக்கும், உறுதுணையாய் இருக்க வேண்டும். நம் பாரத தேசம் பாரெங்கும் புகழ்பெற தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளையும், தனது உழைப்பால் உன்னத நாளாய் உருமாற்றும் ஒவ்வொருவருக்கும் வரலாற்றின் பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
எனவே, இன்றைய சூழலில், லட்சிய மாணவர்களும், ஆசிரியர்களும், உருவாக்கப்பட வேண்டியதில்லை. புழுவில் இருந்து உருவாகி,சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் போல் தாங்களாகவே உருவாகிக் கொள்வார்கள்.
கல்லுக்குள் இருக்கின்ற சிலை போல, ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு தலைவன், ஒரு கலைஞன், ஒரு அறிஞன் என ஒரு சக்திவாய்ந்த மாமனிதன் இருக்கின்றான். அதனை வெளிக்கொணரும் கலைக்கூடம் தான் பள்ளிக்கூடம். பள்ளிக்கு வந்துவிட்டீர்கள். இனி மாமனிதர்களாய் வெளிவர வேண்டும்.