பால்வினை நோய்கள் – சிகிச்சை முறைகள்
பால்வினை நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்து வாழ்நாளை குறைக்கும் பல்வேறு நோய்களில், பால்வினை நோயும் ஒன்று. இந்நோய் உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் பால்வினை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
பொதுவாக பால்வினை நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற புணர்ச்சி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, பல துணைகளுடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கிறது. இந்நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை பால்வினை நோய் மருத்துவ அலுவலர் கலாவதி கூறியதாவது:-
பால்வினை நோய்கள்
ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தான் பால்வினை நோய்கள் ஆகும். இதன் கிருமி தொற்று ஆண்களை பொறுத்தவரை, வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் புண் ஏற்படுதல், அரிப்புடன் கூடிய வீக்கம், தொடை இடுக்குகளில் வீங்குதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுதவிர பிறப்பு உறுப்புகளில் மருக்கள் தோன்ற வாய்ப்புண்டு.
பெண்களை பொறுத்தவரை, மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இதுபோன்ற பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் அலட்சியப்படுத்தக்கூடாது. டாக்டரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
10-க்கும் மேற்பட்ட…
பால்வினை நோய்களை பொறுத்தவரை, சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்றவை முக்கிய கிருமி தொற்று ஆகும். இதுதவிர டெனிடல் அல்சர் என்ற கிருமி தொற்றும் உண்டு. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். பால்வினை நோய்களை கண்டறிய வி.டி.ஆர்.எல். என்ற பரிசோதனை இருக்கிறது.
இந்த பரிசோதனை செய்தால் பால்வினை நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய முடியும். ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
30 நாள் சிகிச்சை
ஒருவருக்கு பால்வினை நோய் கிருமி தாக்குதலை கண்டறிய வி.டி.ஆர்.எல். பரிசோதனை மேற்கொள்ளும் போது அதனுடன் எச்.ஐ.வி. (எய்ட்ஸ் கிருமி) உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனையின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. பரிசோதனையின் முடிவில் பால்வினை நோய் கிருமி அல்லது எச்.ஐ.வி. நோய் கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.
பொதுவாக கிருமி தொற்றின் தாக்குதல் எந்த அளவுக்கு உள்ளதோ? அல்லது எந்த வகையான கிருமி தொற்றால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்பதை பரிசோதனையின் கண்டறிந்தவுடன் குறைந்தபட்சம் 7 நாட்கள் அல்லது 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.
குணப்படுத்தக்கூடிய நோய்
பால்வினை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். ஆணும், பெண்ணும் ஒன்று சேராமல் விலகி இருத்தல் அவசியம். டாக்டர் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் டாக்டரின் அறிவுரைப்படி நடக்காமல் போனால் சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி போகும்.
பொதுவாக பால்வினை நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
அலட்சியம் கூடாது
ஒருவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது எச்.ஐ.வி. நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று எச்.ஐ.வி. நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் சிகிச்சையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக 100-ல் 99 சதவீதம், ஆண், பெண் முறையற்ற புணர்ச்சியால் மட்டுமே பால்வினை நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு சதவீதம் மட்டுமே, பால்வினை நோய் உள்ள ஒருவரின் ரத்தத்தை அடுத்தவருக்கு செலுத்துவதால் அந்நோய் அவருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனாலும் இப்போது பலவகையான பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவரின் ரத்தம் அடுத்தவருக்கு செலுத்தப்படுகிறது. அதனால் அந்த வகையிலும் பால்வினை நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பொதுவாக பால்வினை நோயை பொறுத்தவரை பெண்களுக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை ஏற்படக்கூடும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதல் ஆகும். பால்வினை நோய் தாக்கிய பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது நாளடைவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் பெண்கள் இதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலை கண்டறிந்து விட்டால் அதனை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
மீண்டும் பரிசோதனை
பொதுவாக பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளானவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் முற்றிலும் நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. சிகிச்சை நாட்கள் முடிந்த பிறகு டாக்டரை அணுகி மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பதும் அவசியம்.
பொதுவாக ஆண், பெண் சேர்க்கையில் ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்று முன்னோர்கள் கூறிய நல்லொழுக்க முறையை கடைபிடித்து வந்தால் இதுபோன்ற பால்வினை நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.