சமூக வலைத்தளத்தில் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டால் ஏமாற்றங்கள் ஏராளம்..
சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம்
இது டிஜிட்டல் யுகம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் செல்போன், கணினி திரையில் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்தவொரு விஷயத்தையும் முன் பின் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்கன் கருத்துகளையும் அறிந்து கொள்வதோடு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடிகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்கள் சமூகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.
‘ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம்’ என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் ‘லைக்’ கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.
நம்மைப் பற்றி நம் குடும்பத்தை பற்றி பொது இடத்தில் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதைப் போல தான் இதுவும். எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் தோன்றாது. சைபர் கிரைம்கள் உருவாக இது போன்ற தகவல் பரிமாற்றங்கள் வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க மக்களிடையே போதுமான விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மனோரீதியாக இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பல. எந்த ஒரு விஷயத்தையும் நேரில் சொல்ல தயங்குபவர்கள் கூட இப்படி சமூகவலைத்தள குழுக்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் பதிவு செய்யும் விஷயங்களுக்கு இணையாக தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். மனதில் பூட்டிவைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால் மனம் ‘ரிலாக்ஸ்’ ஆவதாக உணர்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது? என்று யாரும் யோசிப்பதில்லை.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிடமுடியாது. இயந்திரத்தனமாக ஓடோடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நண்பர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கான சூழல் உருவாகாதபோது மன அழுத்தத்தை போக்க சமூகவலைத்தள குழுக்கள் உதவுகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் சம்பந்தமான விஷயங்கள், முக்கிய ஆலோசனைகள், சாதனைகள், மதிப்புரைகள், வாழ்த்துகள், பாராட்டுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்போது சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க நேரிட்டால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கருத்து மோதல்கள் உருவாக வழிவகுத்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்வது வேறு, பலரோடு பகிர்ந்து கொள்வது வேறு. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
சமீபகால ஆய்வின் படி சமூகவலைத்தளங்கள் பல உறவுகளைப் பிரித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்களால் பயனடையலாம். மாறாக அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.
மின்சாரம் பயனுள்ளது தான். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மீறி பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்துவிடும். எல்லா தொழில் நுட்பமும் அப்படித்தான். ஒருபோதும் அவை மனித உணர்வுகளை பாதித்து விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதை சரி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே அவர் களின் பாதுகாப்புக்கு உலைவைத்துவிடும்