குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘பிரக்டோஸ்‘ எனும் சர்க்கரையும், கார்பன்டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை.
குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘பிரக்டோஸ்‘ எனும் சர்க்கரையும், கார்பன்டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. முக்கியமாகத் தாகம் தணிவதும் இல்லை.
குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காபீன் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தை தரக்கூடியவை.
குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் குடிக்கிறோம். இதனால் இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு. உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும், மீண்டும் குளிர்ந்த மென் பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.
குளிர்பானங்களில் உள்ள ‘பிரக்டோஸ் கார்ன் சிரப்‘ எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி. குளிர்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சர்க்கரை உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கணையத்தில் இருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென் பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது.
இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப் டூ‘ நீரிழிவு நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு குளிர்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதயநோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது.