புதியவைமருத்துவம்

எய்ட்ஸ் எனும் உயிர் கொல்லி நோய் – விழிப்புணர்வு தேவை

உலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பொதுவாக பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் மாலா கூறியதாவது:-

மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். இந்த கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய் தான் எய்ட்ஸ் ஆகும். பொதுவாக எய்ட்ஸ் நோய் 4 வழிகளில் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்.ஐ.வி. கிருமி உள்ள ஒருவரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துதல், கருவுற்று இருக் கும் தாயின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவுதல், சுத்தம் செய்யப்படாத ஊசிகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய 4 காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

பொதுவாக ரத்தத்தை நன்கு பரிசோதித்த பிறகுதான் அந்த ரத்தம் பிறருக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை இப்போதெல்லாம் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த 2 முறைகளிலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் கருவுற்று இருக்கும் தாயின் மூலம் எய்ட்ஸ் பரவுதலும் குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பற்ற உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் நோய் இப்போது பரவி வருகிறது.

பொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்பட்டவுடன் ரத்த பரிசோதனை செய்தால் அந்த ரத்தத்தில் கிருமிகள் இருப்பது உடனே தெரியாது. அதற்கு பிறகு 3 முதல் 6 மாதங்கள் கழித்தே பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி. கிருமிகள் உள்ளது தெரியவரும். இதுதவிர ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டாலும் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால் 8 அல்லது 10 ஆண்டுகள் வரை எய்ட்ஸ் நோய் குறித்த அறிகுறியோ, தொந்தரவோ இருக்காது. அதன்பிறகே எய்ட்ஸ் குறித்த பிரச்சினைகள் வெளியில் தெரியும்.

 

 

அதேபோல் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும் அது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க கூடாது. இதுதவிர அடிக்கடி சுவாசக்கோளாறு, பல்வேறு தொந்தரவுகள் வந்தாலும் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது அதனுடன் எச்.ஐ.வி. பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும்.

எச்.ஐ.வி. கிருமி பாதிப்பால் தொடர்ந்து இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலின் எடை குறைதல், தோல் வியாதிகள், பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஏற்படுதல், கை, கால் இடுக்குகள் மற்றும் கழுத்தில் கட்டி உருவாகுதல், வாயில் புண் உண்டாகுதல், நுரையீரல் பாதிப்பு, இதயத்தை சுற்றியுள்ள சதை பகுதி பாதிப்பு, மூளை, சிறுநீரகம், கண், உணவு குழாய் பாதிப்பு உள்பட அனேக நோய்களின் அறிகுறிகள் தோன்றும்.

இதுதவிர பெண்களாக இருந்தால் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுடன் கர்ப்பப்பை புற்றுநோயும் கூடுதலாக வர வாய்ப்புண்டு.

பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமி தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய முதலில் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிருமி தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டால் சி.டி-4 பரிசோதனை என்னும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன்பிறகு வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி என்னும் கூட்டு மருந்துடன் கூடிய வாழ்நாள் சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கூட்டு மருந்தில் 2 நிலை மாத்திரைகள் உள்ளன. முதலில் 1-வது நிலை மாத்திரைகள் வழங்கப்படும். அந்த மாத்திரைக்கு எய்ட்ஸ் கிருமி கட்டுப்படவில்லையென்றால் அடுத்ததாக 2-ம் நிலை மாத்திரைகள் வழங்கப்படும்.

இவ்வாறு சிகிச்சையை தொடங்கியவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை சி.டி-4 பரிசோதனை செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.

அதேபோல் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தாக்குதல் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருக்கும். இதனை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தொடங்கும் போதே, அந்த பெண்ணுக்கும், கணவனுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் யாருக்கு எய்ட்ஸ் கிருமி தொற்று உள்ளது என்று தெரிந்து விடும். அப்போதே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

 

 

இதுதவிர அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 1½ வயது வரை 3 முறை ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குழந்தை பிறந்த 45-வது நாளில் முதல் ரத்த பரிசோதனையும், 6 முதல் 1 வருடத்துக்குள் 2-வது முறையும், 1½ வயதில் 3-வது முறையாக ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் தாக்குதல் உள்ளதா? என்பது கண்டறியப்படும். அவ்வாறு கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படும்.

பொதுவாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஐ.சி.டி.சி என்னும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு இருக்கும் ஆலோசகர்களிடம் இந்நோய் குறித்த விவரங்களை முற்றிலும் அறிந்து கொள்ளலாம். இந்நோய் குறித்து சிறிய அளவில் அறிகுறிகள் தோன்றினாலும் கண்டிப்பாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.

வாழ்வில் ஒருமுறை கூட எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் இந்நோயால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் ஏ.ஆர்.டி. மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் நல்ல சத்தான, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் உண்ணலாம். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்.

எய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர் இருமும், தும்மும் போதோ, அவருடன் இருப்பதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.

சமூகத்தால் அவர்களை ஒதுக்கக்கூடாது. எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாள்தோறும் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். இதுதவிர பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவதும், நல்லொழுக்கமான வாழ்வும் இந்நோயிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker