கழுத்து தண்டு வாதம் – ஆயுர்வேத சிகிச்சை முறை
கழுத்து வலி வயதாகும்போது, முதுகுத்தண்டு, கழுத்து இவற்றை இணைக்கும் எலும்புகள், கார்டிலேஜ் எனப்படும் ஜவ்வுகள் ஆகியன பழுதடையும், கிழியும் நிலை ஏற்படலாம்.
முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.
முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.
முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.
அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை:
அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.
இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.
உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.
மூன்றுவித சிகிச்சை முறைகள்:
சமன சிகிச்சை:
பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.
சோதனா சிகிச்சை முறை:
பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.
பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.
ரசாயன சிகிச்சை:
உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.
(1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.
(2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.
வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.
சிகிச்சை முறைகள்:
சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.
வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது. பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.
சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
முதல் நிலை
ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.
இரண்டாம் நிலை
இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.
மூன்றாம் நிலை
வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.