பெண் குழந்தைகளின் பாலியல் வன்முறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதை போல், எல்லா பிரச்சினைகளுக்கும் இரு பக்கங்கள் உள்ளன.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பு இருப்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் சிலரும், பெற்றோர்களில் ஒரு தரப்பினரும் இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கள் எதிர்ப்புக்கு அவர்கள் சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறார்கள்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெற்றோர்களில் சிலர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அந்த துயரத்தில் இருந்து மீண்டு எழுந்து எதிர்கால வாழ்க்கை போராட்டத்தை சமாளிக்கும் வகையில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்றனர்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தில், குற்றவாளி அந்த சிறுமியை கொன்று விடும் ஆபத்து உள்ளது என்று கருத்தரங்கில் பேசிய ஒரு பெண் தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை வேதனையுடன் சில கருத்துகளை தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் தனது 3½ வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அது குறித்து புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது அங்கு போலீசார், தனது மகளிடம் நடந்த சம்பவம் பற்றி துருவித்துருவி கேட்டதும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறியதும் தனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்ததாக அவர் வருத்தத்துடன் கூறினார்.
இன்னொரு பெண் பேசுகையில், தனது மகளை தனது கணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். என் கணவரை போன்ற குற்றவாளிகளை தூக்கில் போட்டுவிட்டால், அவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பியவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும், மேலும் அவர்களுடைய குடும்பமும் வருமானம் இன்றி ஆனாதையாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் தலைவர் அனுஜா குப்தா பேசுகையில், பாலியல் வன்முறை தொடர்பான 94 சதவீத வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், எனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்ற நிலை வந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் போலீசில் புகார் செய்வது குறைந்துவிடும் என்றும் கூறினார்.