நினைவாற்றல் அதிகரிக்கும் நாடி சோதனா பிராணாயாமம்
மூளைக்கு அதிக அளவு சுத்த ரத்தமும், பிராண சக்தியும் கிடைப்பதால் எதையும் தெளிவாக சிந்திக்கும் திறனும், நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படவும் முடிகிறது.
பெயர் விளக்கம்:- நாடி என்றால் சூட்சும பிராண வாயு செல்லும் பாதைகள், சோதனா என்றால் சுத்தி என்று பொருள். இந்த பிராணாயாமப் பயிற்சி நாடிகளை சுத்தப்படுத்துவதால் நாடி சோதனா பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை:- சுகாசனம், அர்த்த பத்மாசனம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அமரவும். தலை, கழுத்து முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின்முத்திரையை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். வலது கையை மடக்கி, வலது கை விரல்களால் நாசாக்ர முத்திரை செய்து வலது நாசியை கட்டை விரல்களால் அடைத்து இடது நாசி வழியாக மூச்சுக்காற்றை முழுவதுமாக வெளியே விடவும்.
நாடி சோதனா பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி
இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசியையும் மோதிர சுண்டு விரல்களால் அடைக்கவும், அப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து, வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும்.
வலது நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும். வலது நாசியை கட்டை விரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். இடது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும். இது நாடி சோதனா பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது.
புதியதாக பழகும்போது சில வாரங்கள் 6 முதல் 10 சுற்று பயிற்சி செய்து தொடர்ந்து தினமும் செய்யும் பயிற்சியில் சுற்றுக்களை அதிகரித்துக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை மாலை பயிற்சி செய்யலாம்.
பிராணாயாமத்தில் மூச்சை இழுக்கும் கால அளவும் மூச்சை வெளியே விடும் கால அளவும் சமமாக இருக்க வேண்டும். ஆரம்ப பிராயத்தில் சிலருக்கு சுவாசத்தின் போக்கு வரவு சரியாக அமையாவிட்டாலும், தொடர்ந்து செய்யும் பயிற்சியில் சரிவர அமையும். கவனம் செலுத்த வேண்டிய இடம்:- சுவாச இயக்கத்தின் மீதும், ஆக்ஞாசக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு:- நாடி சோதனா பிராணாயாமத்தை பகலில் செய்யும்போது இரண்டு நாசிகளில் மாற்றிச் செய்வதில் முதலில் இடது நாசியின் வழியாக மூச்சை வெளியே விட்டு பிறகு இழுக்க வேண்டும். பிராணாயாமத்தை முடிக்கும் போதும் இடது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்கவும். இரவில் பயிற்சி செய்யும்போது முதலில் வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விட்டு, பிறகு மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். முடிக்கும் போதும் வலது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்கவும்.
பயன்கள்:-மூளைக்கு அதிக அளவு சுத்த ரத்தமும், பிராண சக்தியும் கிடைப்பதால் எதையும் தெளிவாக சிந்திக்கும் திறனும், நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படவும் முடிகிறது. பீனியல் மற்றும் பிட்யூட்டரி நன்கு செயல்படத் தூண்டுவதால் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற சுரப்பிகள் நன்கு இயங்கி வயதுக்கு ஏற்ற உடல், மன வளர்ச்சி சீராக அமையும்.
உடல் மன இயக்கத்துக்கு ஆதாரமான இடா, பிங்களா நாடிகளில் சமமாக பிராணவாயு செலுத்தப்படுவதால் மனஅழுத்தம் நீங்கும். கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவாற்றல் அதிகரிக்கும் 72,000 நாடிகளும், தூய்மை பெறும்.