நல்ல கொழுப்பு… நான்கு வழிகள்…
நம் அன்றாட வாழ்க்கை முறையில் கீழ்கண்ட 4 விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம்.
‘கொலஸ்ட்ரால்’ என்றாலே நமக்குப் பயம்தான். ஆனால், நன்மை புரியும் கொலஸ்ட்ராலும் இருக்கிறது. ‘எச்டிஎல்’ (ஹை டென்சிட்டி லிபோபுரோட்டீன்ஸ்) என்று அழைக்கப்படும் இது, ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை ஈர்த்து, மீண்டும் ஈரலுக்குக் கொண்டு செல்கிறது. அங்கிருந்து கெட்ட கொலஸ்ட்ரால் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகிறது.
நம் அன்றாட வாழ்க்கை முறையில் கீழ்கண்ட 4 விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமான உணவு :
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுவகைகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம், உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். பாதாம், வாதாம் போன்ற பருப்பு வகைகள், மீன்கள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. நார்ச்சத்து மிக்க முழுத் தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதும் அவசியம். அதேவேளையில், பூரிதக் கொழுப்பு, ‘டிரான்ஸ்பேட்’ நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி :
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும் உடம்பில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை வளர்க்க, மேம்படுத்த உதவும். நடைப் பயிற்சி, படிகளில் ஏறி-இறங்குவது, மேல் உடம்பு, கீழ் உடம்புக்கான எடைப் பயிற்சி ஆகியவை நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்து வருவது, எச்டிஎல் அளவைக் கூட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரியான உடல் எடை :
எப்போதும் சரியான உடல் எடையைப் பராமரிப்பது, நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் காக்க உதவும். உணவு முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்தாலே எடையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். உதாரணத்துக்கு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், இனிப்பு நிறைந்த பானங்கள், ஜாம்கள், கேக்குகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வாட்டுதல், அவித்தல் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். இறைச்சியில் கொழுப்பைத் தவிர்ப்பதும், கோழிக்கறியில் தோலை நீக்கிவிடுவதும் நன்று. கொழுப்பு குறைக்கப்பட்ட பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
மது, புகை தவிர்த்தல் :
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை உடலுக்கு கேடு பயக்கும். மதுப் பழக்கம் தேவைக்கு அதிகமாக தேவையற்ற உணவுகளை உண்ணத்தூண்டும். இதனால் கெட்ட கொழுப்பின் அளவு உடலில் அதிகரித்துவிடும்.