தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளை மேம்படுத்த தேவையான செயல்கள்

விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி, அவர்களை மேம்படுத்த தேவையான செயல்களில் பெற்றோர்கள் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.

எப்போதுதான் தேர்வுகள் முடியும், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று மாணவர்கள் நினைப்பது உண்டு. ஆனால் தேர்வுகள் முடிந்துவிட்ட பிறகு, என்னதான் செய்யலாம் என்று அவர்களே யோசிப்பார்கள். அவர்களுக்கும் ‘போர்’ அடிக்க ஆரம்பிக்கும். இன்னும் சரியாக படித்திருக்கலாம் என்றும் கூட சிலர் வருந்துவர். அப்படி இப்படி என்று விடுமுறையும் முடிந்துவிடும். மீண்டும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று விடுகின்றனர் மாணவ கண்மணிகள்.

விடுமுறை காலங்களில் ஒரு மாணவனுக்கு இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்ற நெருக்கடி இல்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்ற வழக்கமான பாடங்களும் படிக்க வேண்டியது இல்லை. இதனால் முழு சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இது மனம் விரும்பி ஒரு செயலைச் செய்ய ஒரு நல்ல சூழ்நிலை. சில நல்ல காரியங்களையும் செய்து விடலாம்.



பள்ளிக்கூடம் நடக்கும் நேரத்தில் சிந்திக்க இடமில்லை; சிந்தனை செய்ய நேரமும் இல்லை. விடுமுறை நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் சிந்தனை செய்வதற்கு ஒதுக்கலாம். அதுவும் காலையில் இந்த பணியைச் செய்யலாம். எவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கலாம் என்று பார்ப்போம்.

நாம் யார்? நமது பலம் யாவை, பலவீனம் யாவை? நமக்கு பிடித்த வேலை என்ன? நமது லட்சியம் என்ன? போக வேண்டிய இடம் எது? நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இன்று மட்டும் என்னென்ன வேலைகளைச் செய்யலாம்? என்பன பற்றி சிந்திக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் பிடித்தமான நூல்களை வாசித்து முடிக்கலாம். அறிவியல் நூல்களை வாசிக்கலாம். அவை இயற்கை உலகை தெரிந்து கொள்ள பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக இந்த விண்வெளி எப்படிபட்டது? இந்த பூமி எப்படி தோன்றியது? மின்சாரம் எப்படி தயாரிக்கிறார்கள்? மனிதன் எப்படி தோன்றினான்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் அறிவியல் நூல்களை வாசிக்கலாம்.

சிறந்த அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். சர் ஐசக் நியூட்டன், கலிலியோ, மைக்கல் பாரடே, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது உன்னத கண்டுபிடிப்புகளை எண்ணி வியப்படையலாம். இதனால் மாணவனுக்கு உற்சாகமும், ஆர்வமும், சாதிக்க துடிக்கும் எண்ணமும் மலரும்.

பொதுவாக, பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலப்புலமை இல்லை என்பது தீராத ஒரு குறையாகவே உள்ளது. இதனால்தான் அறிவியல் கருத்துகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத அவல நிலையும் உள்ளது. கல்லூரியிலும் இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலால் பொறியியல் படிப்பு படித்திருந்தும் வேலை கிடைப்பது இல்லை.

எனவே இந்த கோடை விடுமுறையில் ஆங்கிலம் தாராளமாகப் பேச ஒரு பயிற்சிப் பள்ளிக்கு போகலாம். அல்லது இணையதளத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி எடுக்கலாம். தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகள் உடற்பயிற்சி செய்யத் தயாராகத்தான் இருப்பார்கள். எனவே பெற்றோரும், இந்த விடுமுறை நாட்களில் பிள்ளைகளை ஒரு மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அதுவும் உடல் பருமனாகிவிட்ட பிள்ளைகளை கட்டாயமாக விளையாட வைக்க வேண்டும்.

சில குழந்தைகள் கைப்பந்து, கால்பந்து, இறகு பந்து, டென்னிஸ், நீச்சல், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், கராத்தே என்று எதாவது விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடும். அவர்களை அருகிலுள்ள கோடை கால பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கலாம்.

ஏதாவது விளையாட்டு ஒன்றில் சிறந்து விளங்கினால் அந்த மாணவனை சிறந்த விளையாட்டு வீரனாகவே மாற்றிவிட முடியும். இந்தியாவிற்கு ஒரு விளையாட்டு கதாநாயகன் கிடைப்பான். இன்று சைக்கிள் ஓட்டுதல், அலை சறுக்கு விளையாட்டு, மாரத்தான் ஓட்டம், ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளும் வந்துவிட்டன.

குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம். அதுவும் ஒரு பயனுள்ள கல்விச் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம். கோடைகாலம் ஆனதால் ஒரு மலை பிரதேச சுற்றுலா அழைத்துச் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கிவிடலாம். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் ஒரு நல்ல இணைப்பும் ஏற்படும்.

இயற்கை சூழல் உள்ள இடங்களான ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, இமயமலை, சிம்லா போன்ற இடங்களை பிள்ளைகளுக்கு காட்டினால் அவர்களுக்கு இயற்கை மீது அக்கறை வரும். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்படும். வன விலங்குகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு வரும்.

செய்தித்தாள்களை விடுமுறை நாட்களில் அறிமுகப்படுத்தலாம். இதனால் பிள்ளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கிட்டும். உலக நடப்புகளும் தெரியவரும். உலக நடப்பு தெரியாத மனிதன் இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்காத மனிதன் என்றுதான் கூறவேண்டும்.

பிள்ளைகள் ஒரு செய்தியை அவர்களாக எழுதிக் காட்டச் சொல்லலாம். அந்த சிறுவன் அல்லது சிறுமி பின்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஆவதற்கும், கதை ஆசிரியர் ஆவதற்கும், ஊக்கப் பேச்சாளர் ஆவதற்கும் அது வழிவகுக்கும்.

நம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலையில் நிச்சயம் ஆர்வம் இருக்கும். இயற்கையிலே பாட திறமை உள்ளவர்களை ஒரு பாடல் ஆசிரியரிடம் அனுப்பி பயிற்சி தரலாம். ஓவியம் வரைய துடிக்கும் பிள்ளைகளை ஓவியரிடம் அனுப்பி வைத்து பயிற்சி தரலாம்.

சிலருக்கு சிலை வடிக்க ஆர்வம் இருக்கும், பர்னிச்சர் செய்ய ஆர்வம் இருக்கும், கார் வடிவமைக்கவும் ஆர்வம் இருக்கும். இதற்கெல்லாம் அனுமதி வழங்கி பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம்.

இன்றைக்கு பல பிள்ளைகளுக்கு காலையில் எழும் பழக்கம் இல்லை. பெற்றோர் தட்டி, அடித்து எழுப்பும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதில் சந்தேகம் இல்லை. விடுமுறை நாட்களில் அவர்களை அலாரம் வைத்து ஐந்து மணிக்கு எழ பயிற்சி தரலாம். 21 நாட்கள் தொடர்ந்து அவர்களாக எழுந்து விட்டார்கள் என்றால் அதுவே ஒரு நிரந்தர பழக்கம் ஆகிவிடும்.

இந்த விடுமுறை காலத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்று தரலாம். ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஸ், மாண்டரின்(சைனா), ஜப்பானிஸ் போன்ற மொழிகள் கற்கலாம். அசாத்திய திறமை மிக்க பிள்ளைகள் குறுகிய காலத்தில் ஒரு மொழியைக் கற்று விடுவார்கள். அப்படி கற்றுவிட்ட மாணவ, மாணவியர்களுக்கு, பின்னர் ஒரு நாள் அயல் நாடுகளில் நல்ல வேலை எளிதில் கிடைத்துவிடும். உயர்தர வேலைவாய்ப்புகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஆக, விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி, அவர்களை மேம்படுத்த தேவையான செயல்களில் பெற்றோர்கள் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.

முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker