இருசக்கர வாகனங்களும், முதுகு வலியும்
3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பஸ் ஓட்டுநர்களும் முதுகுவலிக்கு தப்பிப்பது கிடையாது. தொடர்ந்து இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு காரணம் குண்டும், குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுதண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதோடு, கணினி முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்த பிரச்சினை இன்னும் அதிகரித்துவிடும்.
இதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. முதுகுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான மோட்டார் சைக்கிளை பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகுவலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்சைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்.
மிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இது முதுகுவலி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும்போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அடி முதுகு(லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்கு தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரிய துண்டை மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து இருசக்கர வாகனம் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குண்டும், குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியை தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும், குழியுமான சாலைகள்தான் முதுகுவலி தொல்லைகள் ஏற்பட முக்கிய காரணம்.