புதியவைமருத்துவம்

அதிக உடல் பருமனால் வரும் கேடுகள்

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது.

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.

உணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

அதிக உடற்பருமனால் வரும் கேடுகள்:

* பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.
* அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
* எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.
* முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.

* இருதய நோய்களை உண்டாக்கும்.
* ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
* சம்போக சக்தி குறைந்து விடும்.
* பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.

* உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.
* அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
* உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.

* அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.
* நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
* குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

* இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.
* பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு:

அரிசி உணவை மிகவும் குறைக்க வேண்டும். கோதுமை மற்றும் ராகியினால் செய்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.

வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒருவேளை உணவாக சாப்பிடலாம். கறிவேப்பிலை மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், உணவுடன் பூண்டையும், கறிவேப்பிலையை சட்னியாகவும் செய்து அதிகம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

விலக்க வேண்டியவை:

கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை மிகவும் குறைக்க வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும். காபி, டீ, பால் குடிக்கக் கூடாது.

வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள் முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மதுபானங்களை விலக்க வேண்டும்.

உடல் பருமனை குறைக்க பயனுள்ள சாறுகள்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு கீழ்கண்டவைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடிக்கவும் அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளென மாற்றிக் குடித்து வரலாம். இதனால் விரைவில் உடல் பருமனை குறைக்க முடிகிறது.

1. ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தேனும், அரை எலுமிச்சை பழசாற்றையும் கலந்து குடிக்க வேண்டும்.

2. ஒரு தம்ளர் கேரட் சாறில் 10 மிளகை பொடி செய்து கலந்து குடிக்க வேண்டும். மாலையில் கொள்ளு என்ற தானியத்தினால் தயாரித்த சூப்பை ஒரு தம்ளர் குடிக்க வேண்டும்.

3. கருணைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கருணைக்கிழங்கு பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் பருமனை குறைக்கச் சில பயனுள்ள குறிப்புகள்:

* எப்போதும் நமக்குத் தேவையான அளவை விட சிறிது குறைத்து சாப்பிட வேண்டும்.
* தினமும் உணவை உட்கொள்வதற்கு 10 நிமிடம் முன்பாக இரண்டு தம்ளர் இளஞ்சூடான நீரைக் குடிப்பதால், குறைந்தளவு உணவை சாப்பிட துணை புரிகிறது.
* பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.
* ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது.
* ஆகாரம் உட்கொண்டவுடன் அதிகமாக நீரை குடிக்கக் கூடாது. இதனால் தொந்தி வயிறு அதிகமாகும்.

* உணவு உட்கொள்வதற்கு முன்பு வயிறு எந்த அளவுக்கு விரிந்து இருக்கிறதோ, அதே அளவு உணவு உட்கொண்ட பிறகும் இருக்க வேண்டும்.
* வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
யோகா பக்க விளைவுகள்

இல்லாத ஒரு சிகிச்சை

தற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.

உடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் – பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.

ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker