முதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியை தொடங்குபவர்களுக்கான ஆலோசனை
ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.
உடற்பயிற்சியில் நிறைய வகைகள் உள்ளன. இவற்றில் Cycling என்கிற சைக்கிள் மிதிப்பது Cardio flexibility strength வகையைச் சார்ந்தது. சைக்கிள் மிதிப்பதன் மூலம் இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் வலுவடையும். மேலும் உடலில் உள்ள தசைகளுக்கு வலு தரும் சிறந்த பயிற்சியாகவும் இருக்கிறது. இதயம் நன்கு பலப்படும். அதனால் இதயத்துக்கு இதமான பயிற்சி, உகந்த பயிற்சி என்று சைக்ளிங்கை சொல்லலாம்.
நுரையீரல் நன்றாக விரிந்து கொடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் நுரையீரலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. சைக்கிள் மிதிப்பது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலத்துக்கும் மிகுந்த பயனளிக்கிறது. முக்கியமாக, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சைக்கிள் மிதிப்பது என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படையான உடல் உழைப்பைப் போல் ஆகும்.
முதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?
‘‘ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். சிலருக்கு உடம்பு, கால், மூட்டு வலியும் இருக்கும். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை இந்த பிரச்சனை இருக்கும். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.
இந்த சிரமத்தைத் தவிர்க்க முதன்முதலாக சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குபவர்கள் 2 கி.மீட்டர் தொலைவில் தொடங்கலாம். அதன்பிறகு மெல்ல மெல்ல நாளடைவில் தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
அதேபோல் சைக்கிள் மிதிப்பதை உடற்பயிற்சியாக தொடர நினைப்பவர்கள் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சியாக செய்யலாம். உடல்நலத்துக்கு பயனளிப்பதோடு, தூய்மையான காற்றும் கிடைக்கும். முறையாக சைக்கிள் மிதித்து பழக விருப்பப்படுவர்கள் உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை பெற்று மிதிக்கத் தொடங்கலாம். உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என கருதுபவர்கள் தினமும் சைக்கிள் மட்டும் மிதித்தால்கூட போதும்.
சைக்கிளிங்குக்கு ஏற்ற நேரம் அதிகாலை என்று சொல்லலாம். வளிமண்டலத்தில் சுத்தமான காற்று கிடைக்கும். அதனால், அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வது சிறப்பானது.’’
‘‘சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு உடற்பயிற்சிக்கூடத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதைவிட வெட்ட வெளியில் சைக்கிளை மிதித்துகொண்டு சென்று வருவதுதான் நல்லது. இதனால் மனதில் அமைதி கிடைக்கும். உளவியல்ரீதியிலும் ஆரோக்கியத்தைப் பெறலாம். ஓடும்போதோ அல்லது வேறு உடற்பயிற்சியின்போதோ உங்களுக்கு மூச்சு வாங்கும் சிரமம் ஏற்படும். ஆனால், சைக்கிள் மிதிக்கும்போது மிதமான வேகத்தில் செல்வதால் சுவாசமும் சீராக இருக்கும். வெட்டவெளியில் சைக்கிள் மிதிக்க சூழல் இல்லாதவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிற Static cycle மிதிக்கலாம்.’’
‘‘மூட்டுவலி உள்ளவர்கள், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தில் லிகமெண்ட் பிரச்சனை இருப்பவர்கள் அவற்றை முழுவதுமாக குணப்படுத்திய பிறகுதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.’’