குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது
கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். விழுங்கிய பொருள் வெளியே வரும்வரை நம் உயிர் நம் கையில் இருக்காது. அந்தப் பதற்றமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாது.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.
எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.