செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா… என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.
கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.
செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
“கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.
அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.