உடல் வலியை போக்கும் சவாசனம்
இந்த ஆசனம் களைப்பையும், உடல் வலியையும் போக்குகிறது. உடல் உறுப்புகள் ஓய்வு பெறுவதால் புத்துணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
‘சவ’ என்றால் பிணம். ஆசனம் என்றால் இருக்கை. இந்த பயிற்சியில் பிணம் போல் படுத்திருப்பதால் ‘சவாசனம்’ என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: மல்லாந்து விரிப்பின் மேல் படுக்கவும். குதிகால்களை சேர்த்து வைத்து கால் விரல்களை அகற்றி வைக்கவும். கைகளை மடக்காமல் பக்கவாட்டில் நீட்டி வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கும்படி இருக்கட்டும். தலை எந்தப் பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும். தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது வலது உடல் பாகம் சமமாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.
மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும். கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.
உடலின் எந்த உறுப்பையும் அசைக்காமல் பிணம் போல் சலனமில்லாமல் இந்த ஆசனத்தில் 5 முதல் 10 நிமிடம் இருக்கவும். முடிவில் நிதானமாக கை கால் விரல்களை அசைத்து வலது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து பிறகு இடது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து, எழுந்து உட்காரவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாசத்தின் மீது கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: ஏற்கனவே மல்லாந்து படுத்து செய்யும் ஆசனங்களுக்கு இடையே சவாசனத்தில் சில நிமிடங்கள் இருந்து பிறகு அடுத்த ஆசனம் செய்யவேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்லா பயிற்சிகளையும் செய்து முடித்த பிறகு கடைசியாக 5 முதல் 10 நிமிடம் சவாசனம் செய்ய வேண்டும்.
பயன்கள்: யோகா பயிற்சியினால் உண்டாகும் களைப்பையும், உடல் வலியையும் போக்குகிறது. உடல் உறுப்புகள் ஓய்வு பெறுவதால் புத்துணர்வை அதிகரிக்கச் செய்கிறது. உடலெங்கும் ரத்த ஓட்டம் சீராக அமையும்.