செக்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே தயங்கும் இந்த சமூக சூழலில் ஹோமோ செக்ஸ் குறித்தெல்லாம் நினைக்க கூட முடியாது. ஹோமோசெக்ஸ் என்றாலே ஏதோ ஒரு குற்றமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் சமூகத்தில் மிகவும் தரம் தாழ்ந்தவர்கள் என்ற ரீதியிலும் பார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஹோமோ செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாதது.இரண்டாவது தவறான கற்பிதங்களை நினைத்துக் கொள்வது. ஹோமோ செக்ஸ் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தவறான விஷயங்கள் அதன் உண்மை விவரம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பிறப்பு :
ஹோமோ செக்ஸ் என்பது பிறப்பிலிருந்தே வருவது அல்ல, பழக்க வழக்கங்களால் அல்லது ஈர்ப்பினால் வருவது தான், சிகிச்சையளித்தால் சரியாகும் என்று பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது. ஒருவருடைய செக்ஸ் விருப்பம் என்பது அவரது ஹார்மோன் மாற்றங்களை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அது பிறக்கும் போதிருந்தே அவர் உடலில் இருக்கும். அதனை நாம் எந்த விதத்திலும் மாற்ற முடியாது.
மனக்குறை :
ஹோமோசெக்ஸ் என்பது ஒரு வகை மன வியாதி என்று சொல்லப்படுகிறது. அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஆரோக்கியமாக இல்லை என்றால் ஹோமோ செக்ஸில் விருப்பம் கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் தவறான கருத்து.
அமெரிக்கன் மனநல கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி ஹோமோ செக்ஸ் என்பது ஒரு மனக்குறை அல்ல. அதோடு அவர்கள் தங்களது மேனுவலிலும் கூட அதனை நீக்கினார்கள் . அதில் மன நோய்கள் குறித்த பட்டியல் இடம்பெற்றிருக்கும் அதிலிருந்தும் ஹோமோ செக்ஸ் என்பது மனக்குறை அல்ல என்று உறுதி செய்து நீக்கியிருக்கிறார்கள்.
பாலினம் :
பெரும்பாலும் ஹோமோ செக்ஸில் விருப்பம் கொண்டவர்கள் தன்னுடைய இணையை எதிர்பாலினமாக அணுகுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அல்லது எதிர்பாலினமாக நினைத்துக் கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் தவறான கருத்து.
வெகு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள்.மற்றபடி பெரும்பாலானோர் தங்கள் பாலினத்தின் மீது எந்த பொய்யான எதிர்ப்பார்ப்புகள் அவர்களிடத்தில் இல்லை.
குழந்தை வன்புணர்வு :
ஹோமோ செக்ஸில் ஈடுபாடு உடையவர்கள் தான் அதிகப்படியாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. இதுவும் மிகவும் தவறான எண்ணம். இது உண்மையும் கிடையாது.
ஹோமோ செக்ஸ் :
இது மிகவும் அபத்தமானது. ஹோமோ செக்ஸில் விருப்பம் கொண்டவர்கள் பெரும்பாலும் செக்ஸுக்காக மட்டுமே அணுகுவார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. இது மிகவும் தவறானது. ஹெட்ரோ செக்ஸுவல் என்பது எதிர்பாலினம் மீது ஈர்ப்பு கொண்டவர்களை குறிக்கிறது. ஆண், பெண் எப்போதும் யாரையும் செக்ஸிற்காக மட்டுமேவா அணுகுகிறார்கள்? அதே போலத் தான் இவர்களும்.
குழந்தை வளர்ப்பு :
இரு பாலினத்தினர் சேர்ந்து குழந்தையை வளர்க்கும் போது தான் அந்த குழந்தையை நன்றாக வளர்க்க முடியும். மாறாக ஒரே பாலினத்தினர் வளர்க்கும் போது அந்த குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவறான எண்ணம்.
திருமணம் முடிந்து கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகோ அல்லது அவர் இறந்து விட்டாலோ ஒரு பெண் தனியாக குழந்தையை பராமரிக்கும் சூழல் உருவாகும். அப்போதும் இதே கருத்தை சொல்கிறோமா என்ன?
இளவயது :
இது அதிகமாக நம்பப்பட்டு வரும் விஷயம் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டால் அவர்கள் வளர்ந்ததும் தன் பாலின விருப்பம் கொண்டவர்களாக மாறிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் தவறானது.
இது யாரும் தீர்மானிக்க முடியாது. இயல்பிலேயே வரும் விருப்பமான இதனை குறைவான புரிதல்களால் தவறான விஷயங்களை நம்ப வேண்டாம்.
வாழ்க்கை முறை :
தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களின் பழக்க வழக்கங்கள்,வாழ்க்கை முறையே விசித்திரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது முட்டாள்தனமான ஒன்று.
இது உண்மையல்ல பிறரைப் போல மிகவும் சாதரணமான அன்றாட வாழ்க்கையைத் தான் அவர்களும் வாழ்கிறார்கள். விசித்திரமான எந்த பழக்கங்களும் அவர்களை தனித்துவம் படுத்துகிற மாதிரி இருக்காது.
அனுபவம் :
தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் அவர்களை தன் பாலின விருப்பம் கொண்டவராக மாற்றுகிறது என்று நம்பப்படுகிறது. இதுவும் தவறான எண்ணம் தான். எந்த புறச் சூழலும் அவர்களின் பாலியல் தேர்வு செய்யும் விருப்பங்களை மாற்றுவதில்லை.