குழந்தைகளுக்கு காய்ச்சலால் வரும் வலிப்பு நோய்
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலால் மிக அதிக அளவில் வலிப்பு வரும்.
காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது உயிருக்கு ஆபத்தான சில விஷக்காயச்சல்களாலும் வலிப்பு ஏற்படலாம். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.
ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
உடல் வெப்பம் அதிகரிப்பு
கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.
அபாய நிலை
* குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
* காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
* பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
* மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
* ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
* காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
* ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
* 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.
மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்
* 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
* மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
* குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
* அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு
கவனிக்க வேண்டியவை
1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.