குழந்தையின் கையெழுத்தை அழகாக்கும் பயிற்சிகள்
குழந்தைகளின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால் அடிக்கடி கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடையும்.
எழுத்து என்பது ஒருவித ஓவியம்தான். அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள். அனைவருக்கும் அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை. ஆனால் அழகான கையெழுத்தை பெற சில சுலபமான வழிமுறைகள் உள்ளன. அவற்றை தெரிந்துகொள்வோம்..
முதன்முதலாக எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்க நெல் பரப்பி அதன்மீது குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து எழுதக் கற்றுக்கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதன்பிறகு மணல் பரப்பி அதன் மீது எழுதக் கற்றுக்கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பென்சில், மை பேனாக்கள், பந்து முனைப் பேனாக்கள் என்று எழுதுகோல்களின் வகைகள் அதிகரித்தன.
நல்ல கையெழுத்து இருந்தால்தான் படிப்பிலும், பணியிலும் முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. தெளிவாகவும், விரைவாகவும் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
மாணவ-மாணவிகளின் உடல், மனம், மூளை மற்றும் அறிவு வளர்ச்சியில், கையெழுத்து முக்கியப்பங்கு வகிப்பதற்கான காரணங்களைப் பல ஆய்வுகள் விளக்கி உள்ளன.
கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால் அடிக்கடி கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடையும்.
களிமண்ணில் சின்னச்சின்ன உருவங்கள் செய்ய பழகிக்கொள்ளுங்கள். இதனால் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், மாணவர்களின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
வீட்டில் இருக்கும் மைதா, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை அகலமான தட்டில் வைத்து ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் செய்யலாம். இதனால் கை களுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் கையில் உள்ள நரம்புகள் வலுப்படும். பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.
பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லலாம்.
கோழிமுட்டை, யானை உருவங்களை கலர் பென்சில்களால் படம் வரைந்து வண்ணம் தீட்டுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துகளை சீராக எழுத முடியும்.
முதலில் பென்சிலை லாவகமாகப் பிடிப்பது. இரண்டாவது பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது, மூன்றாவதாக பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் பயிற்சி செய்தால் முறையாக எழுதக் கற்றுக்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
முதலில் ஆள்காட்டி விரலால் மணல் மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின் மீது பென் சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்று பயிற்சிகளுக்கு பிறகு அவர்கள் கையெழுத்து அழகாக மாறும்.
மாணவர்கள் எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும்.