தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராது
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய்ப்பால் குடிப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமை. அதைக்கொடுப்பது தாயின் கடமை. அன்னையை நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தைக்கு தாயார் 6 மாதம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சதவீதம் தமிழகத்தில் 50 சதவீதம்தான் இருக்கிறது.
இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குழந்தை பெற்ற தாய்மார்கள் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தடைபடுகிறது. இதனால் டப்பா பால், பவுடர் பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு புகட்டும் நிலை உருவாகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்தான் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தடிமன் குறைவாக இருக்கும். டப்பா பால், பவுடர் பால் கொடுத்து குழந்தைப் பருவத்தில் தடிமனாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவை வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய், வாந்தி-பேதி, நிமோனியா, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் அவர்களது உடல் வாகு, மனது இலகுவாகும். பெண்களின் அழகும் அதிகரிக்கும்.
அரசு துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கு பிரசவ கால விடுப்பாக முதலில் 6 மாதம் வழங்கப்பட்டது. தற்போது 10 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும்போதும் இடைவேளை நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்ப்பாலை எடுத்து 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தட்ப-வெப்ப நிலையில் வைத்திருந்தும் குழந்தைகளுக்கு புகட்டலாம்.
பிரசவத்துக்குப்பிறகு பதற்றம், இனம்புரியாத பயம், மன அழுத்தம், சந்தேகம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதனால் பிரசவமான பெண்கள் மன அழுத்தம், பயம் போன்றவற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.