5 வயது குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டை அறிந்து கொள்வது எப்படி
4 அல்லது 5 வயதிற்குப் பின்னர் உங்கள் குழந்தைகளின் கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை எவ்வாறு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.