குண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம் வாங்க
சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.
தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர்.
அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம். உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும்.
பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும்.