உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு ஒரு கலை என்பார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் பெரும்பாலும் அந்த கலையில் வல்லவர்களாக இருப்பதில்லை.
குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.
அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.
நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.
குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.
அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.
இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.
ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.
அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.
நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.
நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.
ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.