நீரிழிவு, சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் பஸ்சிமோத்தானாசனம்
நீரிழிவு நோய், சிறுநீரக நோய்களையும் நீக்குவதற்கு மிக பயனுள்ள ஆசனம் இது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம்: “பஸ்சிம” என்றால் மேற்கு என்று பொருள். “உத்தான” என்றால் பலவந்தமாக இழுக்கப்பட்டு என்று பொருள். யோக சாஸ்திரம் உடலமைப்பைக் கூட தலைப் பகுதியை கிழக்கு என்றும் கால்பகுதியை மேற்கு என்றும் இரண்டு பக்க உடலை வடக்கு தெற்கு பகுதி என்றும் கூறுகின்றது. இந்த ஆசனத்தில் மேற்கு பகுதியை நோக்கி தலை முன்னால் செய்வதால் பஸ்சிமோத்தானாசனம் என்றழைக்கப்படுகிறது.
செய்முறை : தண்டாசனத்தில் உட்காரவும். கைகள் இரண்டையும் தலைக்குமேலே உயர்த்தி மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். முழங்கைகள் மடங்கக்கூடாது. மூச்சை வெளியே விட்டுக்கொண்டு, கைகளை மடக்காமல் முன்னுக்கு குனிந்து இரு கால் பெருவிரல்களை கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல்களால் இழுத்துப்பிடித்து தலையை மேலே தூக்கவும். முதுகை முன்னுக்கு சற்று சாய்ந்த நிலையில் வளைக்காமல் நேராக வைக்கவும். கண்களால் புருவ மத்தியை பார்க்கவும். இந்த நிலையில் சிலமுறை மூச்சை ஆழமாக இழுத்துவிடவும்.
மூச்சை வெளியேவிட்டு முன்னுக்கு குனிந்து முழங்கால்களில் முகம்படும்படி வைக்கவும். முழங்கை மூட்டுகளை தரையில் தொடும்படி வைக்கவும். இந்த ஆசன நிலையில் 1-2 நிமிடம் சாதாரண மூச்சுடன் முடிந்தளவு ஆழமாக இழுத்துவிடவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு தலையை மேலே உயர்த்தி கைகளை விடுவித்து முதல் நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை மேல்கண்ட முறைப்படி 3-4 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்தவேண்டிய இடம் : முதுகுத்தசை, அடிவயிறு மற்றும் மூச்சின் மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : ஆரம்பப் பயிற்சியில் பலருக்கு முன் வளையும்போது முழங்கால்களின் அடிப்பகுதி தரையில் படியாமல் தூக்கிக்கொள்ளும். சிலரால் கால் விரல்களை கூட தொடமுடியாது. அத்தகையவர்கள் கணுக்கால் பகுதியை கைவிரல்களால் பிடித்து பயிலலாம். அல்லது ஒரு துண்டின் இரு முனைகளையும் கையால் பிடித்து உள்ளங்கால்களுக்கு வெளியே துண்டின் நடுப்பகுதியை போட்டு கை விரல்களால் துண்டை இழுத்துப்பிடித்து முடிந்தளவு முன் வளைய முயற்சி செய்யலாம்.
தடைக்குறிப்பு : இடுப்பு சந்து வாதம், இடுப்பு வலி மற்றும் இடம் விலகிப்போன முதுகின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களும், இந்த ஆசனத்தை பயிற்சி செய்யக்கூடாது.
பயன்கள்: கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி, பாலுணர்வு சுரப்பிகள் நன்கு செயல்படவும், அவ்வுறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கவும் மீண்டும் அவ்வுறுப்புகள், சுரப்பிகள் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. நீரிழிவு, சிறுநீரக நோய்களையும் நீக்குவதற்கு மிக பயனுள்ள ஆசனம் இது.