மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்ன காரணம்
போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
மது அருந்துவது இப்போது ‘பேஷன்’ ஆக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள விரும்பும் பெண்கள் குடிக்கிறார்கள். குடிக்க மறுப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்யப்படுகிறார்கள். குடிப்பதன் மூலம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் பெண்கள் பல இழப்புகளுக்கு ஆளாவார்கள். குடிப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனால் பெண்களின் உடல்நிலைதான் கெடுகிறது.
குடிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்’ சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டாக்டர் இந்து அகர்வால் என்பவர் ‘போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்’ என்கிறார்.
மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் தெரியுமா?
பெண்கள் மென்மையான உடல்வாகு கொண்டவர்கள். ஆண்களின் உடலில் தண்ணீர் அதிகம். பெண்கள் உடலில் கொழுப்பு அதிகம். தண்ணீரில் கலக்கும் மதுவின் தீவிரம் குறைகிறது. ஆனால் கொழுப்பில் கலக்கும் மதுவின் தீவிரம் வெகுநேரம் நீடிக்கிறது. மது அருந்தும் பெண்களால் சீக்கிரம் தெளிவு நிலைக்கு வர முடியாது.
பெண்களின் உடலில் இருக்கும் ‘என்சைம்’களின் அளவு குறைவு. அதனால் ஆல்ஹகால் ரத்தத்தில் அதிக அளவு கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும். போதையின் விளைவுகள் அதிகமாகி, மூளையையும் வெகுவாக பாதிக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், போதையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனநிலையில் சீரற்றநிலை உருவாகி, தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் சமூக அந்தஸ்து குறையும். குடும்ப வாழ்க்கை பாதிக்கும். நட்பு, சுற்றம், அலுவலகத்திலும் கெட்டபெயர் ஏற்படும்.
மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கும். வீக்கம், வலி தோன்றும். பின்பு அவர்கள் மது அருந்துவதை விட்டுவிட்டு முறையான சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல் முழு அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உருவாகும்.
பெண்களில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படும். குடிக்காத நேரங்களிலும் அந்த சோர்வு நீடிக்கும். மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து மிகவும் குறைந்து போகும். அதனால் மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.
மது உடலில் அதிகமான பசியை தோன்றுவிக்கும். அதனால் பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் கலோரி அதிகம் கொண்ட ருசியான உணவுகளை கண்டபடி சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நோய்கள் உடலில் குடிகொள்ளத் தொடங்கிவிடும்.
மது உள்ளே போனதும் அதிக அளவு ரத்தத்தில் கலந்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் அவர்களிடம் பதற்றமும், பரபரப்பும் தோன்றும். செயல்திறன் குறைந்துபோகும்.
மது அருந்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகும். கர்ப்பிணிகள் மது அருந்தினால் கருச்சிதைவு தோன்றும். கருமுட்டையையும் பாதிக்கும். ஒருவேளை அவர்கள் கர்ப்பம்தரித்து குழந்தையை பெற்றெடுத்தாலும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 5 வருடத்தில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் மதுப்பழக்கம் பெண்களை அலைக்கழித்து, அவர்களை வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திச் சென்றுவிடும். தூக்கமின்மை அவர்களிடம் தோன்றும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி தற்கொலைக்குகூட தூண்டும்.
மது பெண்களின் மூளையையும் எளிதாக பாதிக்கும். நினைவாற்றலை குறைக்கும். மூளை நரம்புகளை செயலிழக்கச் செய்வதால் காக்காய் வலிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நரம்புகள் பலவீனமாகி ரத்த ஓட்டம் குறையும். அப்போது வெயிலில் நிற்க வேண்டி வந்தால் மயக்கம் ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷத்தைக் கொடுப்பதற்கு சமமாகிறது. தாயின் தொப்புள் கொடி வழியாக மது குழந்தைக்குள் பிரவேசிக்கும். இளம் ரத்தத்தில் கலந்து வெகுநேரம் சஞ்சரிக்கும். குழந்தையின் ஜீரண உறுப்பு வளர்ச்சியடையும் நேரத்தில் ஆல்ஹகால் உள்ளே சென்றால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தலை, கழுத்து, ஜீரண உறுப்புகள், குடல், மார்பகம், கல்லீரல் போன்றவைகளில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.