2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
48 மணி நேரத்துக்குமேல் உணவு உண்ணாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை. இந்தநிலைக்கு ‘கெடோசிஸ்’ (ketosis) என்று பெயர்.
உடல் இந்த நிலையை எட்டிவிட்டால், மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.
72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.
இது பொதுவான கருத்து, ஆனால், உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.