பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா?
50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது.
முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.
கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.</p>
அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.
எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.