புதியவைமருத்துவம்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. இது நரம்புகளுக்கு வலுவூட்டும்.

பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன.

இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றிற்கு ஏதேனும் ஒரு காரணத்துடன் தான் பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் “மாப்பிள்ளை சம்பா” விற்கு ஓர் பெயர் காரணம் உள்ளது.

முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே அந்த ஆண் மகன் இளவட்டகல்லை சுலபமாக தூக்கி விடுவானாம். அந்த அளவிற்கு உடலுக்கு பலத்தை தருவதில் மாப்பிள்ளை சம்பா தனித்து நிற்கிறது.

மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்

“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker