அன்றாடம் நாம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலம் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு தண்ணீர் குறைவாக குடிப்பது, உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை மற்றும் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் தான் காரணமாகும். அதே சமயம் அன்றாடம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலமும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பாராத சில உணவுகள் நமக்கு மலச்சிக்கல் தொல்லையை ஏற்படுத்தவும் செய்யும். இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
* அதிகப்படியான அலுவலக வேலையால் எளிதில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு கடைகளில் உறைய வைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதோடு, கொழுப்புக்களும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, அவற்றை அடிக்கடி எடுத்து வருவதன் மூலம், செரிமானம் சீராக நடைபெறாமல், மலச்சிக்கல் ஏற்படுகிறது.
* வாழைப்பழங்கள் கூட மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவும் அது கனிந்திருக்கும் நிலையைப் பொருத்தது. வாழைப்பழமானது ஓரளவு காயாக இருந்தால், அது மலம் வெளியேறுவதற்கு தடையை ஏற்படுத்தும். அதுவே நன்கு கனிந்திருந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் பச்சை மற்றும் கனியாக வாழைப்பழங்களில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், அது எளிதில் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
* சிப்ஸ் மற்றும் வறுத்த நொறுக்குத்தீனிகளை சிலர் எப்போதும் தின்றவாறே இருப்பார்கள். உண்மையில் அத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதோடு, சீக்கிரம் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
* மாட்டிறைச்சி கூட செரிமானமாக தாமதமாகும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் தான். இவை செரிமான மண்டலத்தினால் எளிதில் உடைக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இச்சத்தை அதிகம் எடுத்தாலும், மலச்சிக்கல் ஏற்படும்.
* உங்களுக்கு பிரெஞ்சு பிரைஸ், பஜ்ஜி, பக்கோடா போன்ற வறுத்த உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அவற்றை அடிக்கடி சாப்பிடுபவரா? அப்படியெனில் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு அது ஒன்றே போதும். அவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதோடு, அவை உணவுகளை குடலினுள் மெதுவாக நகர்த்துவதோடு, வாய்வு தொல்லையுடன் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.
* பலரும் பிஸ்கட், கேக் போன்றவை ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவை ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, உடல் எடை அதிகரிக்கக்கூடியது. மேலும் இவற்றில் நார்ச்சத்து மிகவும் குறைவு மற்றும் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் செரிமானமாவதில் தாமதமாகி, மலச்சிக்கல் ஏற்படும்.
* வாழைப்பழங்களைப் போலவே, காபி சில நேரங்களில் குடலியக்கத்தை சீராக தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். இல்லாவிட்டால், அதிகப்படியான காபியை குடிக்கும் போது, அதில் உள்ள காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தி, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.