குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம்.
உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறீர்கள்? நாள்தோறும் அவர்களைப் பொறுப்பாகக் கவனிக்கிறோம் என்று சும்மா இருந்து விடுகிறீர்களா? அன்று உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது இல்லையா? அது போலக் கூடுதல் கவனம் செலுத்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலக இளைஞர் புத்தக இயக்கம், உலகக் குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாடத் திட்டமிட்டது. குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்றோர் அவர்கள் நினைவிற்கு வந்தனர். அவர்களில் முதன்மையானவராக டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் இருந்தார். அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதியையே உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.
அதன்படி, 1967-ம் ஆண்டில் இருந்து இத்திருநாள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகளாவிய அளவில் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகளை அறிவித்துப் பரிசுகளை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தலைப்பைத் தந்து அது தொடர்பான படைப்புகளுக்குப் பரிசு வழங்குகின்றனர்.
வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள் உணரச் செய்வது, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் புத்தகங்கள் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பதை அறியச் செய்வது இந்த திருநாளின் நோக்கமாகும்.
இந்த நாளில் நாம் குழந்தைகளாக இருந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தெந்தக் கதைகள் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து உள்ளன. அவை வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் பயன்பட்டன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நம் உணர்வை குழந்தைகளிடம் சொல்லி அவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து குழந்தைகளுக்குப் பரிசு தரலாம். படிக்கச் சொல்லி அவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.
நம் குழந்தைகள் நற்பண்பாளர்களாகத் திகழ வேண்டும். எல்லோரிடமும் அன்பாகப் பழக வேண்டும். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். வீரமும் துணிவும் கொண்டவர்களாக விளங்க வேண்டும். நினைத்ததை நிறைவேற்றும் விடாமுயற்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு புத்தகங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, நற்பண்புகளை வளர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து படிக்க கொடுக்கலாம்.
வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்தில் உள்ள நூல்களைக் குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள். தமிழில் அப்படிப்பட்ட நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வகை நூல்கள் குழந்தைகளின் கதை சொல்லும் திறனையும் கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும்.
குழந்தைக் கதைகள் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது தெனாலிராமன் கதைகளே. விக்கிரமாதித்தன் கதைகளை குழந்தைகளின் எல்லை தாண்டியதாகவும், வன்முறையைத் தூண்டுபவையாகவும் கருதுகிறோம்.
குழந்தைகளிடம் கதை கேட்டால் பெரும்பாலானோர் தெனாலிராமன் குதிரை வளர்த்த கதையும், பூனை வளர்த்த கதையும் சொல்வார்கள். உயிரினங்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் கதைகள் அவை. இவற்றைப் படிக்கும் குழந்தைகள் உயிர்களிடம் எப்படி அன்பு காட்டும்?
மற்றவை பெரும்பாலானவை பொய் சொல்லி ஏமாற்றுவது, திருடிவிட்டுத் தப்புவது போன்ற கதைகளாகவே உள்ளன. எதிர்மறைச் சிந்தனையை வளர்க்கும் இந்தக் கதைகளைக் குழந்தைகள் படிக்கலாமா?
மாறாக, விக்கிரமாதித்தன் கதைகள் வீரம், நேர்மை, துணிவு, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், உயிரைக் கொடுத்துப் பிறரைக் காப்பாற்றத் துணிதல், செயற்கரும் செயல் செய்தல் போன்ற உயர்ந்த கருத்துகளைச் சொல்கின்றன. கிளி துன்பப்படுவதைப் பார்த்து இரக்கம் கொண்டு தானும் கிளியாக மாறி அதன் துன்பத்தைப் போக்கும் விக்கிரமாதித்தன் செயல் குழந்தைகள் உள்ளத்தில் அன்பை விதைக்கும். அதில் வரும் புதிர் கதைகள் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம். அந்த நூல்கள் அவர்கள் மேன்மேலும் வளரத் தூண்டுதலாக அமையும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்கி உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.