ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிலர் நன்றாக உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் முடி மெல்லியதாக ஆரோக்கியமற்று இருக்கும். அவர்களுக்கு என்னதான் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான கூந்தலாக சிறப்பாக மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப் போல முடியினை மிக நீண்ட கூந்தலாக வளர வைப்பது என்பது ஏமாற்று வேலை. ஏனெனில் சிலரின் முடி வளர்ச்சி பரம்பரை தொடர்பானது.
பொடுகு இல்லாமல் பொடுகை கட்டுப்படுத்தும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்புகளைப் பயன்படுத்துதல், தரமற்ற விலைக் குறைவான ஷாம்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால் முடி கொட்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் அதில் உள்ள ரசாயன மாற்று முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.
ஷாம்புவை பயன்படுத்தும்போது, தலையினை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுத்து அழுக்கை வெளியேற்றாமல், நுரை வந்ததும் அலசி விடுவதாலும் முடி கொட்டத் துவங்கும். உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலை அழுத்தி தேய்த்து, மசாஜ் கொடுப்பதன் மூலமே இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.
நமது உடலில் செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் உள்ள இறந்த செல்களால் நமது தோலில் கருமை நிறம் தானாகத் தோன்றும். அதேபோல் தலைகளிலும் டெட் செல் எனப்படும் இறந்த செல்கள் இருக்கும். எனவே தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே ரத்த ஓட்டம் சரியாகி புது செல் உருவாகும்.
அதுவே முடி வளர்ச்சிக்கான தூண்டுதல். நமது அம்மாக்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் இயற்கை மூலிகைகளான சீகைக்காயைப் பயன்படுத்தி நமது தலையில் அழுத்தம் கொடுத்து அழுக்கை வெளியேற்றுவது என்பது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான மசாஜாகத் தானாகவே மாறுகிறது. இயற்கையே ஆரோக்கியமான, கருமையான முடிவளர்ச்சிக்கு உகந்தது.