குழந்தைகளை பள்ளிக்கு செல்ல இனி பழக்குங்கள்..
பெற்றோரே உலகம் என்று இருக்கும் குழந்தைகள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
குழந்தைகள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு தயாராக வேண்டிய தருணம் இது. பெற்றோரே உலகம் என்று இருக்கும் அவர்கள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. ஏகப்பட்ட பணத்தை அள்ளிக்கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டாலும், பெற்றோரால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. ‘குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு செல்லுமா? இல்லை என்றால் அழுது அடம்பிடிக்குமா..’ என்ற கவலை அவர்களை சூழ்ந்துகொண்டிருக்கும். அந்த கவலை தீர இதை படியுங்கள்.
பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு முதலில் பள்ளியைப் பற்றிய விவரங்களை முழுமையாக சொல்லிக் கொடுங்கள். ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளவேண்டிய முறையை பக்குவமாக உணர்த்துங்கள்.
ஒழுங்காக படிக்காவிட்டால், ஒழுங்காக ஹோம் ஒர்க் செய்யாவிட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று ஒருபோதும் மிரட்டாதீர்கள். ஆசிரியர்கள் பற்றி கவுரவமான, உற்சாகமான விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்கு சென்றால் அழகான விளையாட்டு பொருட்களும், நிறைய புதிய நண்பர் களும் கிடைப்பார்கள். அவர்களுடனும் நீ சேர்ந்து விளையாடலாம் என்று கூறி, பள்ளி ஒரு அழகான அன்பான உலகம் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.
அவர்களோடு பள்ளியில் புதிதாய் சேர்ந்திருக்கும் சக மாணவ, மாணவிகளை வாய்ப்பிருந்தால் குழந்தைகளுக்கு இப்போதே அறிமுகம் செய்துவையுங்கள்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக இப்போதே தயாராகுங்கள்.
சிறிது நேரம் வெளிவிளையாட்டுகள் விளையாட அனுமதியுங்கள். அதன் பிறகு வீட்டுப் பாடங்களை செய்தால்போதும்.
குழந்தைகளுக்கு எப்படி படிக்க வேண்டும்? எப்படி வரைய வேண்டும் என்பதையெல்லாம் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
பள்ளி திறப்பதற்கு முன்பு முடிந்தால், ஒரு முறை குழந்தைகளை அவர்களது ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவைக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான பயம் நீங்கும்.
புதிய சீருடைகள் வாங்கவும், புத்தகங்கள் வாங்கவும் குழந்தையோடு செல்லுங்கள். புத்தகபை, டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற உபகரணங்கள் வாங்கவும் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.
பள்ளிக்கூட வாழ்க்கைக்கு குழந்தைகளை வீட்டிலே பழக்கப்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை கழுவுதல், கீழே சிந்தாமல் சாப்பிடுதல், பின்பு பாத்திரங்களை அடுக்குதல், சுத்தப்படுத்துதல் போன்றவைகளை எல்லாம் சுயமாக செய்ய கற்றுத்தாருங்கள். வீட்டிலே சில நாட்கள் அப்படி பழக்குவது நல்ல பலனைத் தரும். பள்ளி வாழ்க்கையை அவர்கள் சிறப்பாக நடத்த இந்த பயிற்சி உதவும்.
பள்ளி திறப்பதற்கு முன்பே ஒருசில முறை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பள்ளியை சுற்றி காண்பித்து வகுப்பு அறை, மைதானம், நூல் நிலையம் போன்றவைகளை காட்டி ஆர்வப்படுத்துங்கள்.
பள்ளி திறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே குழந்தைகளை காலையிலே விழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
முதல் நாளில் மற்ற குழந்தைகள் அழுவதைப் பார்த்து உங்கள் குழந்தையும் அழத் தொடங்கலாம். அது பழக பழக சரியாகி விடும். பள்ளியிலே விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.
முதலில் பள்ளியில் விடும்போது, ‘நான் இங்கேயே அதோ அந்த மரத்தடியில் தான் இருப்பேன். நீ போய் விளையாடிவிட்டு வா’ என்று அனுப்பி வைக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் அழுவதை நிறுத்திவிட்டு வகுப்பறைக்குள் செல்வார்கள். இல்லையென்றால் அருகில் யாரும் இல்லை என்ற தவிப்பு அவர்களுக்கு அதிக பயத்தை உருவாக்கிவிடும்.
பள்ளியில் யாராவது குழந்தையை அடித்திருக்கலாம். ஏதாவது ஒரு பொருளை பிடுங்கி இருக்கலாம். அதனால் அவர்களுக்கு கோபமோ, பயமோ ஏற்பட்டிருக்கலாம். அதை போக்கும் விதத்தில் தினமும் வீட்டிற்கு வந்ததும் அருகில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து தேவையான ஆலோசனைகளை பக்குவமாக எடுத்துக்கூறுங்கள்.
எக்காரணத்தை கொண்டும் பிள்ளைகளிடம் ஆசிரியரைப் பற்றி தவறாக பேசவோ, கடிந்துக் கொள்ளவோ கூடாது. அது அவர்கள் மனதில் வேற்றுமையை உருவாக்கிவிடும்.
அவர்களுக்கு பிரியமான நண்பர்களுடன் பழகவிடுங்கள், அப்போது தான் சிரித்து பேசி நட்புடன் இருப்பார்கள். நல்ல நண்பர்கள் உங்கள் குழந்தையின் தனிமையை போக்குவார்கள். அதன் மூலம் பாதுகாப்பையும் உணர்வார்கள். நட்பு குழந்தைகளை பள்ளிக்கூடத்தை நோக்கி ஈர்க்கும்.
பள்ளிதான் அவர்களது முதல் வெளி உலகம். அங்கே எல்லா குழந்தைகளாலும் உடனடியாக பொருந்திப்போக முடியாது என்ற உண்மையை உணர்ந்து, நிதானமாக குழந்தைகளிடம் நடந்துகொள்ளுங்கள். மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவைகளை கைவிட்டு அன்பாக நடந்துகொள்ளுங்கள். அனைத்தும் சாத்தியமாகும்.