பிள்ளைகளின் ஆரோக்கியத்தை காக்க சைக்கிள் பயன்படுத்துவோம்
நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் சைக்கிள் பயணத்தை தொடங்குவதற்கு தயங்குவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவோம்.
இன்றைக்கு மனித உடலில் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஆரோக்கியத்தை பாதுகாக்க பலரும் உடற்பயிற்சி நிலையங்களை தேடி செல்கின்றனர். இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி, பணத்தை செலவு செய்தும் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றிட அனைத்து தரப்பினரும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தங்களின் அன்றாட வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்படி இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் எரிபொருள் செலவு அதிகமாகும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதுக்கு மீறிய உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதற்கு உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்தது மட்டும் காரணம் அல்ல. இதற்கு சாப்பிடும் உணவை சத்தாக மாற்றும் அளவுக்கு உடல் உழைப்பு இல்லாததே முழு முதற்காரணமாகும். இன்றைய கல்வி முறையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்னதாகவும், பள்ளி விட்டு வந்த பிறகும் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் போதிய நேரம் இல்லாத நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த முடிவது இல்லை.
எனவே மாணவர்கள், பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பு, நண்பர்களை சந்திக்க, கடைக்கு செல்வது மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு முடிந்த வரை சைக்கிள்களையே பயன்படுத்துவது அவர்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்வதாக இருக்கும். அதோடு நிலையான அழகை தருவதாகவும் இருக்கும். சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் உடற்பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதோ, உடற்பயிற்சி மையத்துக்கு சென்று தனியாக செலவு செய்ய வேண்டிய அவசியமோ உருவாகாது.
மாணவ பருவத்தில் சைக்கிள் ஓட்ட தயங்குவது பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாகி வயதான காலத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடக்கூடாது. எனவே நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் சைக்கிள் பயணத்தை தொடங்குவதற்கு தயங்குவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவோம்.