குழந்தைகளுக்கு கோடை காலம் ஏற்றதல்ல
குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிட்டால் மறக்காமல், அவர்களின் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். அவை தோல் வியாதிகளில் இருந்து காக்க உதவும். வெளி இடங்களில் அதிக நேரம் செலவிடுவதாக இருந்தால் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பொருத்தமான சன்ஸ் கிரீமை பூசிக்கொள்வது நல்லது.
காட்டன் ஆடை உடுத்துவதோடு அது வெளிர் நிறம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் பாகங்களை வெயிலில் இருந்து காக்கும். அதேபோல் குழந்தைகளுக்கு தரமான டயாபர்களையும் உபயோகப்படுத்த வேண்டும். அவைகளையும் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரும அலர்ஜி பிரச்சினை உருவாகக்கூடும்.
வெளியிடங்களில் குழந்தை தூங்கும்போது எடை குறைவான போர்வையை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.
அகலமான தொப்பியை அணிவது வெயிலில் இருந்து குழந்தையின் முகத்திற்கு பாதுகாப்பு தரும்.
பச்சிளம் குழந்தையாக இருந்தால் அடிக்கடி தாய்ப்பால் புகட்ட வேண்டியது அவசியம். அது உடலில் உள்ள நீரிழப்பை ஈடு செய்யும். அவ்வப்போது கொஞ்சமாவது தண்ணீர் கொடுப்பதும் அவசியம்.
தேவைப்பட்டால் பசும் பாலைகாய்ச்சி வழங்கலாம்.
சிறுவர், சிறுமிகளை வெளி இடங்களில் சென்று விளையாடுவதற்கு ஆசைப்பட்டால் அதற்கு கடிவாளம் போடக்கூடாது. அதேவேளையில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது.
குழந்தைகள் வியர்க்குரு பிரச்சினையால் அவதிப்பட்டால் காய்ச்சிய நீருடன் தயிரை கலந்து உடலில் தடவி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். முல்தானி மெட்டியும் பயன்படுத்தலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து வியர் குருவை போக்கும்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நீரிழப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி தர்ப் பூசணி கொடுப்பது நல்லது. அது உடலில் நீரின் அளவை ஈடு செய்ய உதவும்.
கோடை காலத்தில் காரமான உணவு வகைகள் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேற வழிவகுத்துவிடும். குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும், பழ வகைகளையும் கொடுக்க வேண்டும். கார உணவுகள் குழந்தைகளின் வயிற்றுக்கும் ஏற்றதல்ல.
உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. அவை சருமத்திற்கு நல்லது. ரத்த ஓட்டம் சீராக நடைபெற துணைபுரியும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை செரிமானமாகுவதற்கு அதிக நேரமாகும். அதனால் உடல் சோர்ந்து சோம்பல் தலைதூக்கி விடும்.
ஜூஸ் வகைகள், குளிர்பானங்களில் இனிப்பு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்புவார்கள் என்பதற்காக அதிக இனிப்பு கொடுத்துவிடக்கூடாது.
1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் ஒன்றரை லிட்டர் திரவ உணவுகளை கொடுப்பது அவசியமானது. அவை தண்ணீர், ஜூஸ், சூப்புகள் என எந்தவகையாகவும் இருக்கலாம். கால் லிட்டர் பால் கொடுப்பதும் அத்தியாவசியமானது.
விளையாடும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வீட்டு தோட்ட வேலைகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தலாம். அது உடலுக்கு நல்ல உடற் பயிற்சியாகவும் அமையும். பெற்றோருக்கும் நேரம் பயனுள்ள வகையில் செலவாகும்.
கோடை கால சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரலாம். அந்த முகாம்கள் நல்ல ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தொல்லைப்படுத்துகிறார்கள் என்பதற்காக கோடை கால முகாம்களுக்கு அனுப்பிவிடாதீர்கள். முகாம்களை பற்றி தீர ஆராயுங்கள். ஒருசிலவற்றில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.