ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜானுசிரசாசனம்
ஜானுசிரசாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும், அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
பெயர் விளக்கம்: “ஜானு” என்றால் முழங்கால் என்று பொருள். “சீர்ச” என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனத்தில் முழங்காலை தலையால் தொடுவதால் ஜானுசி ரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். பிறகு இடது காலை மடக்கி குதிகாலை பிறப்புறுப்பை தொடும்படி வைக்கவும். பாதம், வலது தொடையோடு ஒட்டியபடி இருக்கட்டும். வலது காலை இடுப்புக்கு நேராக நகர்த்தி வைக்கவும். கைவிரல்களை தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை ஆழமாக உள்ளுக்கு இழுத்து நிதானமாக வெளியே விட்டபடி,நேராக நீட்டி வைத்திருக்கும் இடது காலின் கட்டை விரலை இருகைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடுவிரல்களால் பிடித்துக் கொள்ளவும்.
வலது கால் வளையாமல் நேராக இருக்கட்டும். தலையை மேலே உயர்த்தி 2 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடவும். மூச்சை வெளியே விட்டபடி உடலை வளைத்து வலது முழங்காலை நெற்றிதொடு மாறு வைக்கவும். முழங்கை மூட்டுகளை தரையில் தொடும்படி வைக்கவும்.
இந்த ஆசனத்தில் 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து தலையை மேலே தூக்கி படம் 16&ல் உள்ள நிலைக்கு வந்து கட்டை விரலை பிடித்திருக்கும் கைவிரல்களை விடுவித்து கால்கள் இரண்டையும் விடுவித்து நேராக நீட்டி உட்காரவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: இடுப்பு, விலாத்தசை மற்றும் முழங்கால் பகுதி மீதும், சுவாதிட்சடான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: ஆசனத்தில் நிலைத் திருக்கும் போது நீட்டி வைத்திருக்கும் காலை எந்த பக்கமும் சாயாதபடி நேராக வைத்திருக்க வேண்டும். கால்விரலை கை விரல்களால் பிடிக்க முடியாதவர்கள் ஒரு துண்டை உள்ளங்காலுக்கு வெளியே சுற்றிப் போட்டு துண்டின் இரு முனைகளையும் கை விரல்களால் கெட்டியாக பிடித்துக் கொண்டு, குனிந்து முழங்காலை தொட முயற்சிக்கவும். நெற்றியால் முழங்கால் மூட்டை தொட முடியவில்லை என்று காலை மடக்கி தொட முயற்சிக்கக் கூடாது.
தடைக் குறிப்பு: இடுப்பு சந்து வாதம், இடம் விலகிப் போன முதுகெலும்பின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பயன்கள்: விலாப் புறதசைகள், இடுப்பு, கால்கள் மற்றும் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும், அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம், அட்ரீனல் சுரப்பி, குடல்கள், பாலின சுரப்பிகள் நன்கு இயங்க ஊக்கு விக்கிறது. சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் ஆரம்ப காலகற்களை கரைக்க உதவுகிறது.